மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: அடுத்தடுத்த விபத்துகளால் அச்சத்தில் பயணிகள்


டார்ஜிலிங்: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்துள்ளது.

நாடு முழுவதும் சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விபத்து ஏற்பட்ட அதே பகுதியில், மீண்டும் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து வருவது ரயில் பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் ஏற்கெனவே விபத்திற்குள்ளாகி நின்ற ரயில் பெட்டிகள் மீது, பயணிகள் விரைவு ரயில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே துறையினர், ரயில் பெட்டிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தற்போது அதே பகுதியில் மீண்டும் ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

x