கணவருக்கு எய்ட்ஸ் இருந்ததால் அவரது மனைவிக்கு கர்நாடகாவில் அரசு வேலை மறுக்கப்பட்டது. இதனால் எச்ஐவி குறைதீர்ப்பாணையத்தை அணுகி அப்பெண் வேலை பெற்றுள்ளார்.
கர்நாடகா அரசுத்துறையில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு மாதம் ரூ.7,500 சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவருக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அது உறுதியானது. தனது கணவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அந்த பெண் சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால் அவரை வேலையில் அமர்த்திய நிறுவனம், மூன்று மாத ஊதியத்துடன் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பியது. இது தொடர்பாக அந்த பெண் பல முறையீடுகள் செய்த போதும், அரசு அவருக்கு வேலை வழங்க மறுத்தது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், எச்ஐவி/எய்ட்ஸ் குறைதீர்ப்பாணையதை அணுகினார். இதன் அதிகாரி சிவகுமார் வீரையா இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அதே பதவியில் உடனடியாக பணியில் அமர்த்துமாறு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்குச் சென்று சம்பளம் பெற்று வருகிறார். இந்த தகவல் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.