போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை ஒழுங்குப்படுத்த புதிய சட்டம்: டெல்லி அமைச்சர் தகவல்


புதுடெல்லி: டெல்லியில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை ஒழுங்குப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லி பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள 'ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்' எனப்படும் தனியார் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் செயல்பட்டு வந்த நூலகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மழை, வெள்ளம் புகுந்து இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். இவர்கள் தெலங்கானாவைச் சேர்ந்த தானியா சோனி (25), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), கேரளாவைச் சேர்ந்த நவீன் டெல்வின் (28) என தெரியவந்தது.

இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பழைய ராஜிந்தர் நகரில் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் போட்டித் தேர்வு பயிற்சி மைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விதிமீறலை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் 'ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்' பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கட்டிடத்தின் அடித்தளத்தில் சட்டவிரோதமாக பயிற்சி மைய செயல்பாடுகளை நடத்தி வந்த சில போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

இச்சூழலில் டெல்லியில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை ஒழுங்குப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை வகுக்க அதிகாரிகள், மாணவர்கள் அடங்கிய குழுவை டெல்லி அரசு அமைக்க உள்ளது.

ராஜிந்தர் நகர், முகர்ஜி நகர், லட்சுமி நகர் மற்றும் ப்ரீத் விஹார் ஆகிய இடங்களில் உள்ள 30 பயிற்சி மையங்களின் அடித்தளங்கள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன, மேலும் 200 பயிற்சி மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஏதேனும் அதிகாரிகள் தவறிழைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத கட்டிட பயன்பாடே, பழைய ராஜிந்தர் நகர் சோக சம்பவத்துக்கு காரணம்.” என்றார்.

x