விபத்தில் சிக்கிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவமனையில் அனுமதி


மலப்புரம்: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு காரில் சென்ற கேரள சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 155-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலைப்பாங்கான வயநாடு மற்றும் கேரளாவின் அனைத்து வட மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வயநாடு, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், பத்தனந்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பத்தனந்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கேரளாவில் வெள்ளப்பெருக்கால் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் காரில் சென்றார். அவர் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி அருகே விபத்திற்குள்ளானது. இதில் அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்தார். இதையடுத்து அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிறுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக, மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் போலீஸார் தெரிவித்தனர்.

x