குடும்பத் தகராறில் ஆற்றில் குதித்த இளம்பெண்: காப்பாற்ற முயன்ற கணவர், உறவினர் பலி


கலபுர்கி: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவர், உறவினர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம், அஃபசல்பூர் தாலுகா சோனா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்த்(32). இவரது மனைவி லட்சுமி(28). கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து கிராமத்தில் உள்ள பீமா பாலத்தில் இருந்து நேற்று மாலை ஆற்றில் லெட்சுமி குதித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமியின் கணவர் சிவானந்த், சம்பந்தி ராஜூ அங்கலகி ஆகியோர் ஆற்றில் குதித்து லட்சுமியைக் காப்பாற்ற முயன்றனர்.

அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவர்கள் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த கிராமத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்த மூவரையும் தேடினர். ஆனால், நேற்று இரவு வரை மூன்று பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நள்ளிரவில் சிவானந்த், ராஜூ அங்கலகி ஆகியோரின் உடல்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. ஆனால், லட்சுமியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஆற்றில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அடித்துச் செல்லப்பட்ட லட்சுமியை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கலபுர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அஃப்ஜலாபுரா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த அவரது கணவரும், உறவினரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x