வயநாடு நிலச்சரிவால் கர்நாடகா- கேரளா சாலை துண்டிப்பு: பேருந்துகள் நிறுத்தம்



பெங்களூரு : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கர்நாடகா- கேரளாவை இணைக்கும் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 147 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன இருநூறு பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக கர்நாடகா - கேரளாவை இணைக்கும் மைசூரு-சுல்தான் பத்தேரி-வைநாடு சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு மீட்புப் பணிக் குழுக்கள் விரைவாகச் செல்லவும், பந்திபுரா சோதனைச் சாவடியில் (பந்திப்புரா செக்போஸ்ட்), என்டிஆர்எஃப் மற்றும் ராணுவக் குழுக்கள் மற்றும் வாகனங்கள் கொண்டு செல்லவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் பசுமை வழித்தடத்தில் தடையின்றி செல்ல அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு-வைநாடு தேசிய நெடுஞ்சாலை 766 வழித்தடத்தில் குண்டலுப்பேட்டை வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குண்டலுபேட்டை-பந்திப்பூர்-கூடலூர் மார்க்கமாக மாற்றுப் பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக போக்குவரத்து மற்றும் கேரள போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் கண்ணூர், நீலம்பூர், கோழிக்கோடு, வடகரா, தலைச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து கூட பெங்களூருக்கு பேருந்துகள் இன்று வரவில்லை. பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு கேரள போக்குவரத்து துறையின் 15-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தினமும் இரவு 8 மணிக்கு மேல் அரசுப் போக்குவரத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இன்று ஒரே ஒரு பேருந்து மட்டுமே கேரளாவுக்குச் சென்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநிலங்களிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குண்டலுபேட்டை-கேரள சாலை இணைப்பும் மாலையில் இருந்து துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கம் தடைபட்டது. கேரளாவின் முத்துங்கா சோதனைச் சாவடி பகுதியில் மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து வயநாடு பகுதிக்கு காலை முதல் 21-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பயணிகள் தாங்களாகவே முன்வந்து டிக்கெட்டை ரத்து செய்தனர். அதுமட்டுமின்றி, சில பயணிகளை கூட்டிச் சென்று, மூன்று அல்லது நான்கு பேருந்துகளில் வெவ்வேறு வழித்தடங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்படும் கழிவுகளை அகற்றுவதற்கு கேரள அரசுக்கு தேவையான ஜேசிபி, கிரேன் மற்றும் பிற கனரக வாகனங்களை வழங்கும் பணியை கர்நாடகா பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரடியாக நிலைமையை கண்காணித்து வருவதாகவும், வயநாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மைசூரு மாவட்ட நிர்வாகம், வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஹெல்ப்லைன் மையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட பேரிடர் மேலாண்மை அறைக்கு தகவல் தெரிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 0821-2423800 அல்லது 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் லட்சுமி காந்த ரெட்டி தெரிவித்துள்ளார்.

x