இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய 5 நிலச்சரிவுகள்


கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், இந்தியாவில் இதற்கு முன்பு பேரழிவை ஏற்படுத்திய 5 நிலச்சரிவுகளும், பாதிப்புகளும் குறித்து இங்கே...

1. கேதார்நாத், உத்தராகண்ட் (2013) - உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூனில் மேக வெடிப்பால் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக கேதார்நாத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். கடுமையான பொருட் சேதம் ஏற்பட்டது. இதுதான் நிலச்சரிவு வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது.

2. மாலின், மகாராஷ்டிரா (2014) - மகாராஷ்டிராவின் மாலின் கிராமத்தில் கடந்த 2014-ல் தொடர்ச்சியான மழைப்பொழிவின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 151 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

3. ஷில்லாங், மேகாலயா (2011) - மேகாலயாவின் ஷில்லாங் நகரில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

4. கோட்டயம், கேரளா (2019) - கேரளாவுக்கு நிலச்சரிவு ஒன்றும் புதிதல்ல. 2019-ம் ஆண்டில், கோட்டயம் மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பயங்கர நிலச்சரிவு உண்டானது. இதில், 15 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

5. மணிப்பூர் (2022) - மணிப்பூர் மாநிலம் கடந்த 2022-ல் பெரும் பேரழிவை சந்தித்தது. தலைநகர் இம்பால் உட்பட மாநிலம் முழுவதும் பெய்த கனமழையின் விளைவாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

x