கவுன்சிலரை கொலை செய்த ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: பெங்களூருவில் பரபரப்பு


ஆனேக்கல் நகராட்சி உறுப்பினரை வெட்டிக்கொலை செய்த பிரபல ரவுடி ஜேகே என்ற கார்த்திக்கை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் நகராட்சி உறுப்பினராக இருந்தவர் ரவி என்ற ஸ்கிராப் ரவி. இவரை கடந்த 24-ம் தேதி ஒரு கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்தது. இந்த கொலைச்சம்பவம் குறித்த சிசிடிவி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்கிராப் ரவியை அவரது அலுவலகத்திற்குள் புகுந்து ஜேகே என்ற கார்த்திக், ஹண்டி ஹரீஷ் என்ற ஹரீஷ், வினி என்ற வினய் ஆகிய ரவுடிக்கும்பல் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனேக்கல் சப்-டிவிஷன் டிஎஸ்பி மோகன் தலைமையிலான போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக ஹரீஷ் மற்றும் வினய் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஸ்கிராப் ரவி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக ஜேகே என்ற கார்த்திக் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், அவர் ஆனேக்கலில் உள்ள மைசூரம் தொட்டி அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் நேற்று இரவு சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை ஆயுதங்களால் தாக்கி விட்டு கார்த்திக் தப்பியோட முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் திப்பேசுவாமி துப்பாக்கியால் கார்த்திக்கை சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த ரவுடி கார்த்திக்கை கைது செய்த போலீஸார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x