காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பட்ஜெட் அறிவிப்பின்போது 26 மாநில பெயர்கள் இடம்பெறவில்லை: நிர்மலா சீதாராமன்


புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கடந்த 2009-ல் பட்ஜெட்அறிவிப்பில் 26 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதற்காக, அந்த மாநிலங்களுக்கு நிதி செலவிடப்படாமல் இருந்ததா?’’ என மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப் பினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2004-05-ல்இருந்து வெளியிடப்பட்ட பட்ஜெட்அறிவிப்புகளை திரட்டி வந்துள்ளேன். 2004-05-ல் பட்ஜெட் உரையின்போது 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. 2006-07நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்16 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதேபோன்று, 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சமர்ப்பித்த பட்ஜெட்டில் பிஹார், உ.பி. உட்பட 26 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதற்காக அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லையா என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் கேட்க விரும்புகிறேன்.

எனவே மாநிலத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றால் அதற்கு நிதி ஒதுக்கப்படாது என்ற தவறான பிரச்சாரத்தை எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அமைச்சர்கள் சென்று, அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

அதேபோன்று, சமூகநல திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் தவறான குற்றச்சாட்டு. 2013-14-ல் வேளாண்மற்றும் விவசாயிகளின் நலனுக்காகரூ.21,934 கோடி ஒதுக்கப்பட்டது. இது, 2024-25-ல் ரூ.1.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அப்போது ஒதுக்கப்பட்ட தொகையை விட தற்போது 5 மடங்கு அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளோம்.

பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.3.2 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொகையை வழங்கியுள்ளோம்.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்

x