கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பட்ஜெட் ஒதுக்கீடு 3 மடங்கு உயர்வு: சிஐஐ மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்


புதுடெல்லி: “காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பாஜக தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பட்ஜெட் ஒதுக்கீடு 3 மடங்கு உயர்ந்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2024-25 நிதி ஆண்டுக்கான முழுபட்ஜெட் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டெல்லிவிஞ்ஞான் பவனில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொழில் துறையினர் சந்திப்பு நடைபெற்றது. ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்தியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சுதந்திரமடைந்த சமயத்தில் நாம் ஏழை நாடாக இருந்தோம். 2047-ல், அதாவது நமது 100-வதுசுதந்திர ஆண்டில் வளர்ந்த நாடாகஆகி இருப்போம். பல்வேறு தடைகள், சவால்களைக் கடந்துஇந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

உலக நாடுகள் இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தை, முதலீடுகளை, திட்டங்களை உற்றுநோக்குகின்றன. உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். உலக நாடுகள் குறைந்த வளர்ச்சியுடனும் அதீத பணவீக்கத்துடனும்உள்ள நிலையில், இந்தியாவோ நல்ல வளர்ச்சியுடன் குறைந்த பணவீக்கத்துடன் உறுதியாக பய ணித்து கொண்டிருக்கிறது.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா5-வது இடத்தில் உள்ளது. என்னுடைய 3-வது பதவிக்காலத்தின் இறுதிக்குள் இந்தியா 3–வது பெரியபொருளாதார நாடாக மாறும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசின் பத்தாண்டு கால ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ)ஆட்சியில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான ஒதுக்கீடு 8 மடங்கும், வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 4 மடங்கும் அதிகரித்துள்ளது.

2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அறிவிக்கப்பட்ட கடைசி பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.16 லட்சம் கோடியாகும். பாஜக தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அது 3 மடங்கு உயர்ந்து ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல், 2004-ம் ஆண்டு யுபிஏ அரசின் முதல் பட்ஜெட்டில் மூலதன செலவினம் ரூ.90 ஆயிரம் கோடி ஆகும். அவர்களது கடைசி பட்ஜெட்டில் அது ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது மூலதன செலவினம் ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மேக் இன் இந்தியா, உற்பத்தியோடு இணைந்த ஊக்கத் தொகை திட்டம், அந்நிய நேரடி முதலீடு விதிகளில் கொண்டுவரப்பட்ட தளர்வு, நவீன லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களால் இந்தியாவில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்களின் வழியே,பலவீனமான நாடு என்ற நிலையிலிருந்து வலிமையான நாடு என்ற நிலைக்கு இந்தியா மாறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

x