சிவபெருமான் கட்டளை எனக் கூறி தாஜ்மஹாலில் கங்கை நீரை ஊற்ற முயன்ற 'கன்வாரியா': தடுத்து நிறுத்திய அதிகாரிகள்


புதுடெல்லி: சிவபெருமான் கட்டளை என கூறி, தாஜ்மஹாலில் கங்கை நீரை ஊற்றும் நோக்கில் உள்ள நுழைய முயன்ற கன்வாரியாவை (காவடி யாத்திரை செல்பவர்) அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் கங்கை நீரை ஊற்றி வழிபட முயன்ற கன்வாரியா ஒருவரை அதிகாரிகள் நேற்று தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக மீனா ரத்தோர் என்ற அந்த கன்வாரியா கூறுகையில், "நான் தேஜோ மஹாலயாவுக்கு (தாஜ்மஹால்), கங்கா ஜலம் வழங்க வந்தேன்.

சிவபெருமான் என் கனவில் தோன்றி கட்டளையிட்டதால், தேஜோ மஹாலயத்தில் காணிக்கை கொடுக்க கன்வர் (புனித நீர்) கொண்டு வந்தேன். ஆனால் போலீஸ்காரர்கள் என்னை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்" என்றார்.

தாஜ் சுரக்ஷா போலீஸ் உதவி கமிஷனர் (ஏசிபி) சையத் அரீப் அஹ்மத் கூறுகையில், “கன்வாரியா ரத்தோர் மேற்கு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். தாஜ்மஹாலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர், ராஜேஷ்வர் கோயிலில் கங்கை நீரை அபிஷேகத்துக்கு வழங்குவதாக கூறி மீனா ரத்தோர் அங்கிருந்து சென்றார்" என்றார்.

அகில பாரத இந்து மகாசபாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட் கூறுகையில், "சிவன் கோயில் என்று கன்வாரியாக்கள் கூறும் இடத்தில் கங்கா ஜலம் வழங்குவது அவர்களின் உரிமை. தாஜ்மஹாலில் கங்கா ஜலம் வழங்குவது எங்கள் உரிமை. அது 'தேஜோ மஹாலயா' சிவன் கோயிலாகும்." என்றார்.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்று கூறி சில குழுக்கள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கடந்த 2017ல் இந்த கூற்றை மறுத்து, தாஜ்மஹால் நினைவுச்சின்னம் ஒரு கல்லறை. அது கோயில் அல்ல என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

x