ரூ.6,198 கோடி மதிப்பில் 2ம் கட்டமாக பயிர்க்கடன்கள் தள்ளுபடி: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!


ஹைதராபாத்: தெலங்கானாவில் ரூ.6,198 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 6.40 லட்சம் விவசாய குடும்பத்தினர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில சட்டப் பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாம் கட்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி, அவரது அமைச்சரவை சகாக்கள் தொடங்கி வைத்தனர். கடந்த 18ம் தேதி முதல் கட்டமாக ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக ரூ.1.50 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், “கடந்த 2022ம் ஆண்டு வாரங்கலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்” என வாக்குறுதி அளித்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும், முந்தைய பிஆர்எஸ் அரசு, தனது 10 ஆண்டுகால ஆட்சியில் மொத்தம் ரூ.25,000 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை என முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து பேசுகையில், “சுமார் 18 லட்சம் விவசாயிகளின் தலா ரூ.1.50 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து எங்கள் நேர்மையை நிரூபித்துள்ளோம்.

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம், ஆகஸ்ட் மாதம் நாடு சுதந்திரம் அடைந்ததைப் போல, விவசாயிகளை கடன் சுமையிலிருந்து விடுவிக்க விரும்புகிறோம்.” என்றார்.

x