வயநாடு நிலச்சரிவில் சிக்கி 84 பேர் உயிரிழப்பு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிப்பதாக கேரள அரசு அறிவிப்பு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 84 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து மூன்று இடங்களில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், விமானப்படை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சற்று முன்னர் வெளியான தகவலின்படி 84 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், அவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கும் இன்னும் மீட்புப் படையினர் முழுமையாக சென்று சேராததால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடிய அச்சம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் முகாமில் முகாமிட்டு, மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். 5க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

x