புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்குதலால் 2,829 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மின்சாரம், ரயில் விபத்துகள், வேட்டையாடுதல் மற்றும் விஷம் உள்ளிட்ட இயற்கைக்கு மாறான காரணங்களால் 528 யானைகளை இறந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள பதிலில், 2023-24ல் யானைகள் தாக்கி, அதிக மனித உயிரிழப்புகள் (629) பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து 2022-23 இல் 605 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் உள்ள யானைகளில் 60 % இந்தியாவில் உள்ளன. இந்நிலையில் வாழ்விட இழப்பு போன்றவை மனித - யானை மோதல்களுக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2019-2024 இடையிலான 5 ஆண்டுகளில் ஒடிசாவில் அதிக மனித உயிரிழப்புகள் (624) பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் (474), மேற்கு வங்கம் (436), அசாம் (383), சத்தீஸ்கர் (303), தமிழ்நாடு (256), கர்நாடகா (160) மற்றும் கேரளா (102) ஆகிய மாநிலங்களில் யானை தாக்கியதில் மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
யானைகளின் உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கியதில் 392 யானைகள், ரயில் விபத்துகளில் 73 உட்பட 528 யானைகளை இந்தியா இழந்துள்ளது. 50 யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டன. அதே நேரத்தில் 13 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் யானைத் தாக்குதல்களால் 2,829 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். இயற்கைக்கு மாறான காரணங்களால் 528 யானைகள் உயிரிழந்துள்ளன என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.