திருச்சூர்: கனமழை காரணமாக கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரளா மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஒருமாதமாக இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வயநாடு மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் தொடர்ந்து ஆக்ரோஷமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. எனவே நேற்று முதலே வயநாடு பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படத் தொடங்கின. ஒரு பக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கிய நேரத்தில், இன்று அதிகாலை வயநாட்டில் அடுத்தடுத்து 4 மணிநேரத்தில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இதில் இதுவரை 56 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், 500-க்கும் அதிகமான குடும்பங்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு ரயில்கள் முழுமையாகவும், பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி குருவாயூர்-திருச்சூர் எக்ஸ்பிரஸ், திருச்சூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஷோரனூர்-திருச்சூர் எக்ஸ்பிரஸ், திருச்சூர் - ஷோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 10 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. திருச்சூர் வடகஞ்சேரி மற்றும் வள்ளத்தோள் நகர் இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16305) திருச்சூரில் நிறுத்தப்படும்.
கண்ணூர்-ஆலப்புழா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூரு சென்ட்ரல்-கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஷோரனூர் வரை மட்டுமே இயக்கப்படும். கோட்டயம்-நீலாம்பூர் ரோடு எக்ஸ்பிரஸ் அங்கமாலியில் இருந்தும், கோழிக்கோடு-திருவனந்தபுரம் ஜன சதாப்தி எர்ணாகுளத்திலிருந்தும் புறப்படும். கன்னியாகுமரி - மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் இருந்தும், நீலம்பூர் ரோடு - கோட்டயம் எக்ஸ்பிரஸ் அங்கமாலியில் இருந்தும் புறப்படும்.
ஷோரனூர் - திருவனந்தபுரம் வேணாடு விரைவு ரயில் சாலக்குடியில் இருந்து தொடங்கும். திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16791) ஆலுவா வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்தபுரம் - ஷோரனூர் விரைவு ரயில் (ரயில் எண். 16302) சாலக்குடியில் நிறுத்தப்படும். மன்னனூரில் தண்டவாளம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, ஷோரனூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.