அம்பாளின் தலைவியாக, சக்திக்கெல்லாம் மகாசக்தியாகத் திகழ்கிறாள் காஞ்சி காமாட்சி அன்னை. அதேபோல், உலகில் உள்ள அம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைமைபீடமாக திகழ்கிறது சமயபுரம். அத்தனை அம்மன்களுக்கும் தலைவியாகக் கோலோச்சுகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.
திருச்சி அருகில் உள்ளது சமயபுரம் திருக்கோயில். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெளியூர் மற்றும் உள்ளூர்களில் இருந்து வருகிற ஒப்ப்பற்ற திருத்தலம் சமயபுரம். அதேபோல், வருடம் 365 நாட்களும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிற ஆலயம் எனும் பெருமையும் சமயபுரத்துக்கு உண்டு.
இங்கே மாரியம்மன், சுகாசினியாக திருக்காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. மேலும் நெற்றி நிறைய விபூதியும், குங்குமமும் அணிந்து காட்சி தருகிறாள். இது காணக்கிடைக்காதது என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.
சமயபுரத்தாள், தன் இடது கால் மடித்து, வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். பாதத்தில், மூன்று அசுரர்களின் சிரசுகள் இருக்கின்றன. இந்த மூன்றும் முறையே, ஆணவம், கன்மம், மாயை முதலானவற்றைக் குறிக்கிறது என விவரிக்கிறது ஸ்தலபுராணம்.
அதேபோல், எட்டுத்திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள் சமயபுரம் மாரியம்மன். முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்து கொள்ளை அழகுடன் காட்சி தரும் அழகே அழகு!
27 நட்சத்திரங்கள் 27 ஆதிக்கங்களை தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கே கோயில்கொண்டு அருள்பாலிக்கிறாள். அதனால்தான் சமயபுரத்தாள் என்றும் மாரியாத்தா என்றும் தாயி மகமாயி என்றும் போற்றி வணங்குகின்றனர் பக்தர்கள். மகாசக்தி மாரியம்மன் என்றும் கொண்டாடுகின்றனர்.
வாசுதேவர் தேவகி தம்பதியின் 8வது குழந்தையான கிருஷ்ணர், நந்தகோபன் யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை, சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து "உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!" என்று கூறி மறைந்ததாக விவரிக்கிறது ஸ்ரீகிருஷ்ண புராணம். அந்த குழந்தைதான் சமயபுரம் மாரியம்மன் என்று ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. இங்கே இந்தத் தலத்தின் விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம்!
விஜயநகர மன்னர், படைகளோடு சமயபுரத்தில் முகாமிட்டார். போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்கு கோயில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டார். அதன்படி போரில் மன்னர் வெற்றி பெற்றார், அம்மனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டார். மேலும் நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார் என்கிறது ஸ்தல வரலாற்றுக் குறிப்புகள்.
உரிய காலத்தில் நாம் கேட்கும் வரங்களைக் காது கொடுத்துக் கேட்பவள், தருபவள் என்பதால் சமயபுரத்தாள் என்ற திருநாமம் அமைந்தது. அதாவது தக்க சமயத்தில் வந்து நம்மைக் காத்தருளுவாள் அம்மன். அதனால்தான் ஊருக்கும் சமயபுரம் என்றே பெயர் அமைந்தது.
தற்போதைய ஆலயம் கி.பி.1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. பக்தர்களது முயற்சியால் 1984ம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது. இந்தக் கோயிலில், ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரின் ஆலோசனைகளை வேண்டினார்கள். மகாபெரியவாளின் அறிவுரைப்படி, ஆலயத்தின் வலது புறத்தில், ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டு வருகிறது. இந்த பிரதிஷ்டை மூலமாக, அம்மனின் மூல விக்கிரகத்தின் உக்கிரம் மாற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தனக்குக் கிடைத்த நன்கொடைகள் மூலம், கோயிலுக்கு குடமுழுக்கு செய்துள்ளார் என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கருவறை விமானம், தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய் என்கிறார்கள். ரூ.20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.
காணிக்கை செலுத்தினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குடும்பத்தகராறு, சொத்துப் பிரச்சினை, பிள்ளைச் செல்வம், கடன் தொல்லை முதலானவற்றுக்காக தங்கரதம் இழுப்பதாக பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள் பக்தர்கள்!
இங்கே இன்னொரு சிறப்பு... அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள். பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை பச்சைப் பட்டினி விரதம் என்கிறார்கள்.
மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரொம்பவே விசேஷமாக விழா நடைபெறுகிறது. இதை மாசித் திருவிழா என்றும் மாசிப் பெருந்திருவிழா என்றும் போற்றுகிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில், அம்மன் விரதம் மேற்கொள்ளத் தொடங்குகிறாள் என்பதாக ஐதீகம்.
அன்று தொடங்கி, பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை நைவேத்தியம் நடைபெறுகிறது. (இன்று மார்ச் 12ம் தேதி மாசி 26ம் தேதி கடைசி ஞாயிறு). அதாவது சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு , நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் அம்மனின் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் பூமாரி பொழிந்து குளிரச் செய்கிறார்கள். இதைப் பூச்சொரிதல் திருவிழா என்று கொண்டாடுகிறார்கள்.
சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் அமைந்துள்ளன. இரண்டாம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்ஸவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.
இன்னொரு சிறப்பு... சமயபுரத்தாள் திருமேனி மூலிகைகளால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. அம்மனின் உத்ஸவத் திருமேனிக்குத்தான் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
மாசி கடைசி ஞாயிறில் அம்மன் விரதம் மேற்கொள்ளத் தொடங்கும் நாளில் இருந்து பங்குனியின் கடைசி ஞாயிறு வரை உள்ள விரத காலத்தில், மாரியம்மனைத் தரிசித்து, பூச்சொரிதல் வைபவத்தில் பங்கேற்று, நம் பிரார்த்தனைகள் அவளிடம் முறையிட்டால் போதும்... தக்க சமயத்தில் நம்மைக் காப்பாள் சமயபுரத்தாள்!