கேரளாவுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிவாரணம்: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!


சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், 2 ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீயணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், விமானப்படை உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் மீட்புப் படையினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மண் சரிவில் சிக்கி புதையுண்டவர்களை தேடும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என அவர் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்திற்கு முதல் கட்ட நிவாரண நிதியாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கி அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

x