பொது விநியோகத்திட்ட முறைகேடு வழக்கு: மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கின் உதவியாளர் பாரிக் பிஸ்வாஸ் தொடர்புடைய இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்ட பொருட்களை வெளிச்சந்தையில் விற்றதன் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2016-2021 காலகட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு நடந்தபோது உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சராக இருந்த ஜோதிப்பிரியா மாலிக் உள்ளிட்ட பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜோதிப்ரியா மல்லிக்கின் உதவியாளர் பாரிக் பிஸ்வாஸ் தொடர்புடைய இடங்கள் உட்பட மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவினர் இன்று ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கியுள்ளனர்.

பாரிக் பிஸ்வாஸ் அரிசி ஆலை உரிமையாளர் ஆவார். இவர், ஜோதிப்ரியா மல்லிக்கின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை பாசிர்ஹாட்டில் உள்ள பிஸ்வாஸின் வீடு மற்றும் ராஜர்ஹட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

பொதுவிநியோகத் திட்ட ஊழல் வழக்கில் கைமாற்றப்பட்ட பெரிய தொகைக்கும் பிஸ்வாஸுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மத்தியப் படைகள் பாதுகாப்புடன், ராஜர்ஹத், பராசத், பாசிர்ஹாட், பங்கர் மற்றும் தேகங்கா ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

x