தொடர் ரயில் விபத்து எதிரொலி: மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்


கொல்கத்தா: தொடர் ரயில் விபத்துகள் தொடர்பாக மத்திய அரசை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியதோடு, மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு முடிவே இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், செரைகேலா- கர்சவான் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஹவுரா-மும்பை மெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். தென்கிழக்கு ரயில்வேயின் (எஸ்இஆர்) சக்ரதர்பூர் கோட்டத்தின் கீழ், ஜாம்ஷெட்பூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பாரபாம்பூ அருகே இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஓம் பிரகாஷ் சரண் கூறுகையில், "அருகே மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது. ஆனால் இரண்டு விபத்துக்களும் ஒரே நேரத்தில் நடந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.” என்றார். இந்நிலையில் நாட்டில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நேரிடுவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு முடிவு கிடைக்காதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மற்றொரு பேரழிவுகரமான ரயில் விபத்து! இன்று அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் பிரிவில் ஹவுரா - மும்பை மெயில் தடம் புரண்டது. பல உயிரிழப்புகள் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளது கவலையளிக்கிறது.

நான் தீவிரமாகக் கேட்கிறேன்: இது ஆட்சியா? கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ரயில் பாதைகளில் மரணங்கள் மற்றும் படுகாயமடைவது முடிவின்றி தொடர்கிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வது? இந்திய அரசின் அலட்சியத்திற்கு முடிவே இருக்காது? இந்திய அரசின் அலட்சியப் போக்கிற்கு முடிவே இல்லையா?” என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

x