மினிமம் பேலன்ஸ் அபராதம்: 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் செய்த பொதுத்துறை வங்கிகள்


டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் 8,500 கோடி ரூபாயை அபராதமாக பொதுத்துறை வங்கிகள் வசூல் செய்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை பொதுத்துறை வங்கிகள் 8,500 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகள் நிர்ணயித்த மினிமம் பேலன்ஸ் தொகையை கடைபிடிக்காததால் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டிற்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மினிமம் பேலன்ஸ் தொகைக்காக அபராதம் வசூலிப்பதை நிறுத்திவிட்டது. இருப்பினும் பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் தொடர்ந்து மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இதன்படி 2019-20ம் ஆண்டில் 1,738 கோடி ரூபாயும், 2020-21ம் ஆண்டில் 1,142 கோடி ரூபாயும், 2021-22ம் ஆண்டில் 2,429 கோடி ரூபாயும், 2022-23ம் ஆண்டில் 1,855 கோடி ரூபாயும், 2023-24ம் ஆண்டில் 2,331 கோடி ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த நிதியாண்டில் 633 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.

வங்கிக் கணக்குகள் உள்ள நகர, கிராம பரப்புகளை பொருத்து இந்த அபராதம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் அபராதம் வசூலிக்கும் இந்த தொகை 34 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x