கர்நாடகாவில் 17 மாதங்களில் ஐந்தாவது முறையாக பீர் விலை உயர்வு


கர்நாடகாவில் பீர் விலை பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் உயர்வால் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பீர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கர்நாடகாவில் பீர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களில் ஐந்தாவது முறையாக பீர் விலை அதிகத்துள்ளதால், அதை குடிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பீர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்புதான் பீர் விலையை நிறுவனங்கள் உயர்த்தின. தற்போது மீண்டும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது எனறு பீர் பிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்..

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பீர் விலை சுமார் 60 ரூபாய் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசு பீர் மீது 20 சதவீத கூடுதல் வரி விதித்தது. இதனால் விலை உயர்ந்தது. அதன்பிறகு, அதிகரித்து வரும் உற்பத்தி செலவை ஈடுகட்ட பீர் உற்பத்தி நிறுவனங்கள் பாட்டிலுக்கு குறைந்தபட்சம் ரூ.10 விலையை உயர்த்தின. பின்னர் பீர் மீதான வரியை அரசு உயர்த்தியதால் கடந்த பிப்ரவரி மாதம் பீர் விலை அதிகரித்தது. தற்போது மீண்டும் பீர் விலையை உயர்த்த அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

உத்திரவாதத் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் கருவூலத்தை நிரப்புவதற்காக சித்தராமையாக அரசு கலால் வரியை கண்மூடித்தனமாக அதிகரிப்பதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விலைவாசி உயர்வுக்கு மத்தியிலும் மாநிலத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, கலால் துறைக்கு ஆண்டுக்கு 34,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது கலால் துறை 2023-24-ம் ஆண்டில் அந்த இலக்கை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் மார்ச் வரை ரூ.128 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி 2023-24-ம் ஆண்டில் கலால் துறைக்கு ரூ.34,628 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு கலால் துறை அதிகாரிகளால் 29,920 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மூன்று முறை மதுபானங்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுப்பிரியர்கள் கவலைப்படாமல் மதுபானங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x