பேருந்தில் துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளைக்கும்பல்: வாகனச்சோதனையில் பரபரப்பு


கர்நாடகாவில் கொள்ளையடிப்பதற்காக பேருந்தில் துப்பாக்கிகளுடன் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் அன்மோட் கலால் சோதனைச் சாவடியில் போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவாவில் இருந்து கர்நாடகா நோக்கி வந்த அரசு பேருந்தை போலீஸார் சோதனை செய்தனர். அந்த பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து பேருந்தில் போலீஸார் சோதனையிட்டனர்.

அப்போது இருவரிடம் 2 துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைப் பிடித்து விசாரித்த போது, ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது குற்றவாளிகள் நான்குபேர் மாரசங்கல் ரயில்வே கேட்டை நோக்கி ஓடினர். ஆனால், அவர்களில் இருவரை ராம்நகர் போலீஸார் கைது செய்தனர். மற்றவரை கோவா போலீஸார் கைது செய்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.

இதன்பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த கோவர்தன்ராஜ் புரோகித் (29), ஷியாம் லால் (23), லடு குக்கா சிங் (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் கர்நாடகாவில் கொள்ளையடிக்க வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களுடன் வந்த மற்றொரு குற்றவாளி தப்பியோடியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ராம்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து கூடுதல் எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். பேருந்தில் மது பாட்டில் சோதனையில் துப்பாக்கிகளுடன் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x