4 நாட்களாக 195 கி.மீ தூரம் பயணம் செய்து எஜமானரை கண்டுபிடித்த நாய்


புனித யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்து போன நாய் நான்கு நாட்களாக 195 கி.மீ பயணம் செய்து மீண்டும் தனது எஜமானரை தேடி வந்தது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா. இவர் வீட்டில் மகாராஜா என்ற பெயரில் நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில், ஆஷாட ஏகாதசியை ஒட்டி மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் பந்தர்பூருக்கு ஞானதேவ கும்பரா குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார். அவருடன் மகாராஜாவும் உடன் சென்றது. இந்த யாத்திரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அந்த கூட்டத்தில் மகாராஜா தொலைந்து போனது. அதை ஞானதேவ கும்பரா குடும்பத்தினர் தேடி அலைந்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின் அவர்கள், யாத்திரையை முடித்துக் கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இந்நிலையில்,நான்கு நாட்கள் கழித்து மகாராஜா, ஞானதேவ கும்பராவைத் தேடி வந்து விட்டது. இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்தில் கண்ணீர் விட்டனர். சுமார் 195 கி.மீ தூரத்தில் தொலைந்து போன மகாராஜா, தனது எஜமானரைத் தேடி வந்த செய்தி, தற்போது வைரலாகி வருகிறது. அதில் மகாராஜாவின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. செல்லமாக வளர்த்தவர்களைத் தேடி நான்கு நாட்களாக பயணம் செய்து வந்த மகாராஜாவின் அன்பு, அந்த கிராம மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

x