ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மும்பை நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், 2 நாட்களுக்கு முன்பு தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளில் மீது மோதி தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதோடு, 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரத்தார்பூர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருந்தது. அந்த ரயில் பெட்டிகள் தண்டவாளத்தின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் அவற்றை மீட்பதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனிடையே மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து மும்பை ஐசிஎஸ்டி ரயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டது. இந்த ரயில் இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் சக்கரத்தார்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3:45 மணியளவில் ஏற்கனவே விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் கிடந்த தண்டவாளத்தில் இந்த பயணிகள் ரயில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது விபத்துக்குள்ளாகி தண்டவாளத்தின் அருகே கிடந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஹவுரா பயணிகள் விரைவு ரயில் மோதி உள்ளது.
இதில் ஹவுரா ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து உள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, 150க்கும் மேற்பட்டோர் காயமடைத்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதையடுத்து தற்போது மீட்புப் பணிகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.