மாமூல் தர மறுப்பு: பியூட்டி பார்லர் உரிமையாளர் வெட்டிக்கொலை!


மாமூல் தர மறுத்த பியூட்டி பார்லர் நடத்திய இளைஞரை ரவுடி கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடைய ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம் ஹாசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் நந்தினி என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்த நிலையில், ஹாசன் புறநகர் பகுதியில் உள்ள கௌசிகா கேட் அருகே நேற்று வந்த சதீஷை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன்றி சதீஷ் நள்ளிரவில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது பெற்றோர், போலீஸில் புகார் செய்தனர். பார்லர் நடத்தி வந்த சதீஷிடம் கடந்த பல மாதங்களாக மாமூல் கேட்டு ரவுடி ராஜூ தலைமையிலான கும்பல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக தங்கள் மகன் இறந்து விட்டதாக சதீஷின் பெற்றோர் குற்றம் சாட்டினர். பல மாதங்களாக மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தங்கள் மகன் உயிர் இழந்திருக்கமாட்டான் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், சதீஷை வெட்டிக்கொலை செய்த கும்பல் ஹாசன் தாலுகாவில் உள்ள குந்திபெட்டாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியை போலீஸார், இன்று காலை சுற்றி வளைத்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட சமுத்திரவல்லியைச் சேர்ந்த ராஜூ, ஆயுதங்களால் போலீஸாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றார். அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராஜூ காலில் குண்டு பாய்ந்தது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீஸாரால் சுடப்பட்ட ராஜூ ஏற்கெனவே கொலை வழக்கில் சிறை சென்றவர். அவரது கும்பல் தான், சதீஷை வெட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x