டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது சிபிஐ நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அமலாக்கத் துறை வழக்கில் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. எனினும் சிபிஐவழக்கு காரணமாக அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தின் சூத்ரதாரியாக கேஜ்ரிவால் செயல்பட்டு உள்ளார்.அவரே வழக்கின் முதன்மை குற்றவாளி ஆவார். ஆம் ஆத்மி முன்னாள் ஊடக பொறுப்பாளர் விஜய் நாயர், மதுபான உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். மதுபான கொள்கைதொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எடுத்தமுடிவுகளுக்கு கேஜ்ரிவால் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஇருக்கிறது.

எந்த காரணமும் இல்லாமல் மது விற்பனையாளர்களின் லாபவரம்பு 5 சதவீதத்தில் இருந்து12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. கடந்த 2021 மார்ச் 16-ம் தேதி தெலங்கானா ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா, தெலுங்கு தேசம் எம்.பி.மகுந்த நிவாசலு ரெட்டி ஆகியோர் டெல்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது மகுந்த நிவாசலு ரெட்டியிடம், ஆம் ஆத்மிக்கு பணம் வழங்குமாறு கேஜ்ரிவால் கோரியுள்ளார். மேலும்சவுத் இண்டியா குழுவை சேர்ந்தவர்கள், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கி உள்ளனர். இந்த பணத்தை ஆம் ஆத்மியை சேர்ந்த விஜய் நாயர் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இவ்வாறு குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத் துறை வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள கேஜ்ரிவால், சிபிஐ வழக்கில் ஜாமீன்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.பி.சிங் ஆஜரானார். அவர் கூறும்போது, ‘‘கேஜ்ரிவாலை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. மதுபான கொள்கை ஊழலில் பெறப்பட்ட லஞ்ச பணம், கோவாசட்டப்பேரவைத் தேர்தலில் செலவிடப்பட்டது. அந்த தேர்தலில் ஒவ்வொரு ஆம் ஆத்மி வேட்பாளருக்கும் தலா ரூ.90 லட்சம் வழங்கப்பட்டது. அதற்கான ஆதாரம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, ‘‘கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்பதற்காகவே கடந்த ஜூன் மாதம் சிபிஐ அவரை கைதுசெய்தது. புதிய மதுபான கொள்கைதொடர்பான கோப்பில் டெல்லி துணைநிலை ஆளுநரும் கையெ ழுத்திட்டுள்ளார். 50 மூத்த அதிகாரிகள் கையெழுத்திட்டு உள்ளனர். அவர்களை வழக்கில் சேர்க்காதது ஏன்’’ என்று கேள்விஎழுப்பினார். இந்த வழக்கில் தேதிகுறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

x