டெல்லியில் மேலும் 13 பயிற்சி மையங்களுக்கு சீல்: சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக டெல்லியில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைத்தளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், அங்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஏராளமான மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், டெல்லி பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் இயங்கிவந்த 13 பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கியதாகக் கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் குருகுல், சாஹல் அகாடமி, சாய் டிரேடிங், ஐஏஎஸ் சேது, டாப்பர்ஸ் அகாடமி, டைனிக் சாம்வாட், சிவில்ஸ் டெய்லி ஐஏஎஸ், கரீர் பவர், 99 நோட்ஸ், வித்யா குரு, கைடன்ஸ் ஐஏஎஸ், ஈஸி ஃபார் ஐஏஎஸ் ஆகிய பயிற்சி மையங்கள் சீல் வைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டன.
இந்தப் பயிற்சி நிறுவனங்கள் விதிகளுக்குப் புறம்பாக தரைத்தளத்தில் இயங்கி வந்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநகராட்சி மேயர் ஷாலி ஒபராய் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விபத்து நடந்த ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை கோரி, டெல்லி ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தைக் கண்டித்து திங்கள்கிழமை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த மையத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு: மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திங்கட்கிழமை பேசுகையில், பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் 'சக்கர வியூகத்தில்' இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, இந்தியாவும் மோடி ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது
இந்தியாவை கைப்பற்றிய பாஜகவின் சக்கர வியூகத்துக்கு பின்னால் 3 படைகள் உள்ளன. அவை, இந்தியாவின் வளங்கள் அனைத்தையும் சொந்தம் கொண்டாடும் இருவர், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள், அரசியல் அதிகார ஆசை. இந்த மூன்றும் சேர்ந்து இந்தியாவை சீரழித்துவிட்டன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இந்த சக்கர வியூகத்தின் சக்தியை பலவீனப்படுத்தும் என்பது எனது கணிப்பு.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் நிதியமைச்சகத்தில் நடைபெற்ற பாரம்பரிய அல்வா கிண்டும் விழாவில் ஒரு பழங்குடியினர், தலித் அதிகாரியை கூட காண முடியவில்லை. மொத்தம் 20 அதிகாரிகள் மத்திய பட்ஜெட்டை தயார் செய்தனர். அவர்களில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவரோ, தலித்தோ, பழங்குடியினரோ இல்லை. இந்திய மக்கள் தொகையில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், மத்திய பட்ஜெட் மூலமாக அவர்கள் எதையும் பெறவில்லை.
பாஜக வகுத்துள்ள சக்கர வியூகம் கோடிக்கணக்கான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த சக்கர வியூகத்தை நாங்கள் உடைக்கப் போகிறோம். இதைச் செய்வதற்கான வழி, உங்களைப் பயமுறுத்தும் ஒன்று. அதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு. இந்த அவையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாத மசோதாவை இண்டியா கூட்டணி நிறைவேற்றும். அதேபோல், சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். அது நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நடக்கும், என்று பேசினார்.
தமிழக பாஜக எதிர்வினை: “ராகுல் காந்திக்கு இந்திய மக்களின் நலத்தை விட 24 மணி நேரமும் அம்பானியை பற்றியும் அதானியை பற்றியும் சிந்தித்து கவலை கொண்டுள்ளார். அவர்களைப் போன்று கோடி கோடியாக சம்பாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால், நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் கொள்ளையடித்த 5000 கோடி ரூபாய் பணத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலே முதலீடு செய்து தொழில் தொடங்குவதை விட்டுவிட்டு இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களை ஆதாரமில்லாமல் கண்ணியமிக்க நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டி அவமானப்படுத்துவது அருவருக்கத்தக்கது” என்று தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்பட்ட 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் தின உதவி தொகையை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நெடுங்காலமாக 127 மீட்க இயலாத படகுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நிவாரண தொகையினை விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியும், நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1.5 லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சமன் செய்த இந்திய ஹாக்கி அணி: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஹாக்கி அணியின் இன்றைய ‘பி’ பிரிவு போட்டியில், 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தது இந்திய அணி. இறுதியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்த நிலையில், இந்த சமன் சாத்தியமானது.
புதிய திட்டம்: குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டு: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை மக்களவை கூடியதும் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
3-வது முறையாக வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ! -வெனிசுலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய தேர்தல் கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட முடிவுகள், மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. வெனிசுவேலாவில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1500+ இடைநிலை ஆசிரியர்கள் கைது: பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு தொடக்கக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை ஜூலை 29-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.அதன்படி, திங்கட்கிழமை காலை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது’ - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. புதிய குற்றவாளிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலின் கருத்து: “திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது. மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.
நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்த ஆணையர் செந்தில்முருகன், தீர்மானம் வெற்றிபெறவில்லை என்றுகூறி, கூட்டத்தை முடித்துக் கொண்டார். இதனால், மகாலட்சுமியின் மேயர் பதவி தப்பியது.
எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்: மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2-ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு தான் செயல்படுத்தியது. அதிமுக அரசின் சாதனைகளை நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கத் தவறிவிட்டனர்.
அதனால்தான் நாம் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.
‘சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு’ - செப்டம்பர் மாதத்துக்குள் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
அரசியல் கட்சியாக மாறும் ஜன சுராஜ்: தனது 'ஜன சுராஜ்' அமைப்பு காந்தி ஜெயந்தி தினத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த வருடம் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.