பிதர்: கர்நாடகாவில் ஒருபுறம் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பிதர் மாவட்டத்தில் மழையில்லாமல் 56 ஏரிகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. குடகு மாவட்டத்தில் இடைவிடாது கொட்டும் பெருமழையால் காவிரி ஆறு அபாய கட்டத்தைத் தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணையில் இருந்து 1.36 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல சுற்றுலா தளங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணா நதியில் 2 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுவதால் இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிக்கமகளூரு பகுதியில் பெய்யும் பெருமழையால் துங்கா, பத்ரா நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சார்மடி மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஹாசன் சிராடி மலைப் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சிவமொக்காவில் மழைக் கொட்டி வருவதால் துங்கா ஆறு கரைபுரண்டோடுகிறது. இப்படி பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவின் எல்லையோர மாவட்டமான பிதரில் மழையில்லாததால் 56 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்த மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறையின் கீழ் 125 ஏரிகள் உள்ளன. அவுராத் தாலுகாவில் உள்ள 17 கால்வாய்களில், 6 ஏரிகள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. மீதமுள்ள 11 ஏரிகளில் பாதிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. கமல்நகர் தாலுகாவில் 19 ஏரிகளில் 4 ஏரிகள் முற்றிலும் காலியாக உள்ளன. 15 ஏரிகளில் பாதிக்கும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. பிதரில் 34 ஏரிகள் உள்ள நிலையில் 8 ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. மற்ற 26 ஏரிகளில் பாதிக்கு குறைவாகவே தண்ணீர் உள்ளது. ஹம்னாபாத்தில் உள்ள 7 ஏரிகளில் 5 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. சிட்டகுப்பா தாலுகாவில் 8 ஏரிகளில் 6 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன, மீதமுள்ள 2 ஏரிகளில் 5 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. பசவகல்யாண் தாலுகாவில் 21 ஏரிகளில் 14 வறண்டு கிடக்கின்றன, மீதமுள்ள 7 ஏரிகளில் 10 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதுகுறித்து பாசனத் துறை அதிகாரிகள் கூறுகையில், " பிதர் மாவட்டத்தில் உள்ள 125 ஏரிகளில் 56 ஏரிகள் முற்றிலும் காலியாகவும், மீதமுள்ள ஏரிகளில் பாதிக்கும் குறைவாகவும் தண்ணீர் உள்ளது. பிதர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நதி குழாயின் சேமிப்பு கொள்ளளவு 7.691 டிஎம்சி. தற்போது அணையில் பாதி தண்ணீர் மட்டுமே நிரம்பியுள்ளது. அணையின் பாதி தண்ணீர் காலியாக உள்ளதால் அணை முழு கொள்ளளவை நிரம்ப வேண்டும் என்றால் கனமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும். இல்லையெனில், பிதர் நகரில் குடிநீர் பிரச்சினை ஏற்படும்" என்றனர்.