டெல்லி பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: மேலும் 5 பேர் கைது


புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி ராஜிந்தர் நகரில் உள்ள ராவ்ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள் என்ற போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென மழை வெள்ளம் புகுந்தது. இதில் அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தில் இருந்த இரு மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பல்வேறு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பயிற்சி மைய நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மாணவ, மாணவிகளின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி மைய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், உரிமையாளருமான அபிஷேக் குப்தா (41), ஒருங்கிணைப்பாளர் டிபி சிங் (60) ஆகியோரை, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது இது தொடர்பாக மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே டெல்லியில் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வந்த 13 போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் அடித்தளத்தை சீல் வைத்தும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

x