சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள்: ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு


புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிஅழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன் 112-வது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் பாரிஸ்ஒலிம்பிக்கின் நிழல் படர்ந்திருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்று இருக்கும் நமது வீரர்களை, மக்கள் உற்சாகப்படுத்த வேண்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பாக கணித உலகில் ஒரு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பாரத மாணவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். நமது நாட்டுக்கு 4 தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

இந்த பதக்கங்களை வென்ற புணேவை சேர்ந்த ஆதித்ய வெங்கட் கணேஷ், சித்தார்த் சோப்டா, டெல்லியை சேர்ந்த அர்ஜுன் குப்தா, கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த கனவ் தல்வார், மும்பையை சேர்ந்த ருஷீல் மாதுர், குவாஹாட்டியை சேர்ந்த ஆனந்தோ பாதுரியை வாழ்த்துகிறேன். அசாமின் சராயிதேவு மொய்தாம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.

இது பாரதத்தின் 43-வது உலக பாரம்பரிய இடமாகும். வடகிழக்கை பொறுத்தவரை இது முதல் இடமாகும். இந்த இடத்தை உங்களது சுற்றுலா பட்டியலில் இணைக்க வேண்டுகிறேன்.

ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட உள்ளோம். அதோடு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தையும் கொண்டாட உள்ளோம். இதையொட்டி நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறி, கதர் ஆடைகளை அதிக அளவில் வாங்க வேண்டுகிறேன். நாடு முழுவதும் காதிப் பொருட்களின் விற்பனை சுமார்400 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி உள்ளன.

போதை தடுப்பு திட்டம் போதை பழக்கத்தை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் மானஸ். 1933 உதவி எண்ணில் இந்த மையத்தை தொடர்பு கொண்டால் போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் அளிக்கப்படும்.

அம்மாவின் பெயரில்.. அம்மாவின் பெயரில் ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்றுஅழைப்பு விடுத்தேன். இந்த இயக்கத்தின்படி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று நடும் இயக்கத்தோடு நாட்டு மக்கள் அனைவரும் இணைய வேண்டும். நாட்டின் சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிடும் இயக்கம், மிகப்பெரிய விழாவாக மாறிவிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் வீடுகளில் தேசிய கொடியேற்றி harghartiranga.com இணையத்தில் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம்தேதிக்கு முன்பாக மக்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள், தகவல்கள் அனுப்பப்படும்.

இந்த ஆண்டும் மக்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். மைகவ் அல்லது நமோசெயலி வாயிலாக ஆலோசனைகளை அனுப்பலாம். உங்களுடைய ஆலோசனைகளை ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் குறிப்பிடுவேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

x