புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்கிறார். அப்போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கு சுமுக தீர்வு காண அவர் சமரச பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்தன. எனினும் இதுவரை சுமுக தீர்வை எட்ட முடியவில்லை. சுமார் இரண்டரை ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் போரில் ஆரம்பம் முதலே இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. கடந்த 2022 செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, ‘‘இது போருக்கான காலம் அல்ல’’ என்று அதிபர் புதினிடம் அவர் நேரடியாக கூறியது உலக நாடுகளின் பாராட்டை பெற்றது.
கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர் சந்தித்துப் பேசினார். அமெரிக்க அதிபர் பைடன் உட்பட ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் உக்ரைன் போர் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சுமார் 9 மணி நேரம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “ரஷ்ய அதிபருடன் தனிப்பட்ட முறையில் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உக்ரைன் விவகாரத்தில் விரைவில் அமைதி ஏற்படும்" என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது, “உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகிறேன்" என்றார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இந்திய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் அரசு ஊடகமான 'டாஸ்' நேற்றுவெளியிட்ட செய்தியில், “உக்ரைன்பிரச்சினையில் சமரச தீர்வை எட்டஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். ரஷ்யா, உக்ரைனுடன் இந்தியாவுக்கு நல்லுறவு நீடிக்கிறது. இருநாடுகளும் இந்தியாவை முழுமையாக நம்புகின்றன. பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின்போது சுமுக தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.