மம்தா ‘வெளிநடப்பு’ சலசலப்பு முதல் இந்தியாவுக்கு முதல் பதக்க நம்பிக்கை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9-வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்தது. 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டம் ஆலோசனை மேற்கொண்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவர் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பிஹார் மாநிலத்தின் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். அதேபோல், நிதி ஆயோக் கூட்டத்தின் பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, பஞ்சாப் கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா முதல்வர்கள் புறக்கணித்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களில் மேற்கு வங்க முதல்வர் மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா வெளிநடப்பு: நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும், பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி பாதியிலேயே கூட்டத்தில் இருநந்து வெளிநடப்பு செய்தார்.

நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” என தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்: மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

“மம்தாவின் கூற்று முற்றிலும் தவறானது” - நிர்மலா சீதாராமன்: நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நேரம் முடியும்போது அதை நினைவூட்டுவதற்காக கூட்டத்தை நிர்வகித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மைக்கில் தட்டி ஒலி எழுப்பினார். யாரெல்லாம் நேரத்தைக் கடந்து பேசினார்களோ அவர்கள் அனைவர் விஷயத்திலும் இது நடந்தது. ஆனால், தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல.

மம்தா பானர்ஜி கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அவரும் மேற்கு வங்கத்துக்காக பேசினார். அதோடு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்காகவும் பேசுவதாக அவர் கூறினார். அவர் பேசினார். நாங்களும் கேட்டோம். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்பது அவருக்கு நினைவூட்டப்பட்டது. கூடுதல் நேரம் வேண்டும் என்று கேட்டு அவர் பேசி இருக்கலாம். சில மாநில முதல்வர்கள் அவ்வாறு பேசினார்கள். ஆனால், மம்தா பானர்ஜி அவ்வாறு செய்யவில்லை. மாறாக, குற்றம் சாட்டுவதற்காக அதை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

பட்ஜெட் விவகாரம்: திமுக ஆர்ப்பாட்டம்: மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுக மீது மத்திய அமைச்சர் விமர்சனம்: “மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்தி இருக்கிறது. உண்மையில், திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டதை விட பல மடங்கு அதிக நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. மக்களிடையே பிரதேசம், மதம், சாதிய அடிப்படையில் திமுக பிளவுகளை உருவாக்கி வருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

நீலகிரியின் முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் மறைவு: நீலகிரியின் முன்னாள் பாஜக எம்.பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மாஸ்டர் மாதன் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 93. மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு: 6 மாநிலங்கள் அறிவிப்பு: ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக ஆளும் குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆகிய 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளர் ஆனார் கமலா ஹாரிஸ்: கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்க நம்பிக்கை: துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் 3-வது இடத்தை பிடித்து இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்க நம்பிக்கையாக அவர் திகழ்கிறார்.

சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாகர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கிறார். அவர் மூலம் இந்தியாவின் முதல் பதக்க நம்பிக்கை வலுத்துள்ளது.

முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் தங்க பதக்கத்தை சீனா வென்றுள்ளது. இதில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

அமித் ஷாவுக்கு பதிலடி தந்த சரத் பவார்: ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்த அமித் ஷாவுக்கு ‘குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நீங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் சரத் பவார்.

x