அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மழையால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி அன்று பருவமழை துவங்கியதிலிருந்து இதுவரை சுமார் 65 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அம்மாநில அவசரகால செயல்பாட்டு மைய (எஸ்இஓசி) அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழை தொடர்பான இறப்பு எண்ணிக்கை இதுவரை 65-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், மழை காரணமாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மின்னல் தாக்கியது, நீரில் மூழ்கியது, வீடு இடிந்து விழுந்தது போன்றவற்றால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்றார். நேற்று முன்தினம் 3 பேர் உயிரிழந்தனர். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தேவ் பூமி துவாரகா (3), பனஸ்கந்தா (2), கட்ச் (2), ராஜ்கோட் மற்றும் சூரத்- (தலா 1) ஆகிய இடங்களில் 9 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவ்பூமி துவாரகாவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும் இதில் அடங்குவர். பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 14,552 பேர் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். சூரத், நவ்சாரி, வல்சாத், பஞ்சமஹால், தோஹாத், வதோதரா, சோட்டா உடேபூர், நர்மதா, பருச், டாங் மற்றும் தபி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது’ என்று தெரிவித்தார்.