பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: பேச அவகாசம் வழங்காததால் மம்தா பானர்ஜி வெளிநடப்பு


புது டெல்லி: இன்று நடந்த நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 9வது ஆட்சிக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்குடன் இக்கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதேபோல், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார்.

எனினும் அவர் பேசுவதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், அதனை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது: "நீங்கள் (மத்திய அரசு) மாநில அரசுகள் மீது பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன்.

நான் பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தனர். எனக்கு முன் இருந்தவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். எதிர்க்கட்சியில் இருந்து நான் மட்டுமே கலந்து கொண்டேன். ஆனால் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது அவமதிப்பு” என்றார்.

x