மத்தியப் பிரதேச பாஜக முன்னாள் மாநில தலைவர் மறைவு: பிரதமர், முதல்வர் இரங்கல்


போபால்: பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் தலைவருமான பிரபாத் ஜா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் மாநில தலைவருமானவர் பிரபாத் ஜா. 67 வயதான இவர் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பிரபாத் ஜா காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனது தந்தை மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் துஷ்முல் ஜா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் பிஹார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள கொரியாஹி கிராமத்தில் இன்று நடைபெறும் என்றார். மறைந்த பிரபாத் ஜா, கடந்த 1957ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிஹார் மாநிலம், தர்பங்காவில் உள்ள ஹரிஹர்பூர் கிராமத்தில் பிறந்தார்.

அம்மாநிலத்திலிருந்து, அவர் தனது குடும்பத்துடன் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியருக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தார். அங்கு அவர் தனது படிப்பை முடித்து, பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். பின்னர் அவர் அரசியலில் களமிறங்கி பாஜகவில் சேர்ந்தார். கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் முதல் 2012 டிசம்பர் மாதம் வரை மத்தியப் பிரதேச பாஜக தலைவராக பணியாற்றினார்.

பிரபாத் ஜா, கடந்த 2008-ல் முதல் முறையாகவும், 2014-ல் இரண்டாவது முறையாகவும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

x