‘வெங்காயம் தந்த துருக்கியின் காயம் ஆற்றுவோம்’ - நன்றி மறவா கோவை வியாபாரிகள்!


உதவிப் பொருட்களுடன் துருக்கி சென்ற இந்தியாவின் நான்காவது விமானம்

வெங்காயத்தின் தேவையால் இந்தியா தடுமாறியபோது அன்போடு உதவிய துருக்கி தேசம், அதன் தற்போதைய துயரங்களில் இருந்து மீள்வதற்கு தங்களாலான உதவிகளை வழங்க முன் வந்திருக்கின்றனர் நன்றி மறவாத கோவை வியாபாரிகள்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி அதிகாலையில் மிகவும் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த பல அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கி சிரியாவில் இதன் மூலம் 8000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளும், மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி வருகின்றன.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு பருவம் தவறி பெய்த பருவ மழை காரணமாக பெரிய வெங்காயம் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை ரூ.120 வரை கிலோ ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து மத்திய அரசு துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்தது. துருக்கியில் இருந்து சுமார் 11 ஆயிரம் டன் வரை இறக்குமதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் பெரிய வெங்காயத்தின் பற்றாக்குறை தீர்ந்ததோடு அதன் விலையும் கட்டுக்குள் வந்தது.

வெங்காயம்

கோவையின் மிகப்பெரிய மொத்த காய்கறி மார்க்கெட்டுகளான டி.கே. மார்க்கெட், எம்.ஜி.ஆர் மார்க்கெட்டுகளுக்கு சுமார் 2 ஆயிரம் டன் வரை துருக்கியின் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்தது. இதனால் கோவை மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இந்தியாவுக்கு அவசர காலத்தில் உதவிய துருக்கி தேசத்தின் தற்போதைய துயர காலத்தில் உதவுவதற்கு மார்க்கெட் வியாபாரிகள் தற்போது உதவ முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:

”இந்தியாவுக்கு துருக்கியில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட போது அது நம் மக்களுக்கு பெரிதும் உதவியது. கோவைக்கு மட்டுமே 2 ஆயிரம் டன் வரை வெங்காயம் கிடைத்தது. நம் நாடு துருக்கிக்கு தேவையான பல்வேறு உதவிகளை படிப்படியாக உதவி வருகிறது. அதில் கோவை மார்க்கெட் வியாபாரிகளும் இணைந்து உதவ தயாராக உள்ளோம். காய்கறிகள் தேவைப்பட்டால் துருக்கிக்கு அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். மத்திய அரசு அதற்கு எங்களுக்கு உதவ வேண்டும். அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர்கள் தமிழ்நாடு மக்கள். அவர்களின் பிரதிநிதியாகவும் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நேசத்துக்குரிய நாடுகளில் ஒன்றான துருக்கியின் தற்போதைய துயரம் போக்க சாமானியர்களின் பிரதிநிதிகளான வணிகர்கள் மத்தியிலிருந்து உதவிக்கரம் நீளுவது, எல்லைகள் கடந்த மனித நேயத்தை பறைசாற்றுவதாகவே வெளிப்படுகிறது.

x