ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவத்தினர் 3 பேர் படுகாயம்


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் இன்று பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று ராணுவவீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கும்காரி பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, மூன்று வீரர்கள் இன்று காயமடைந்தனர். அப்பகுதியில் மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். காயமடைந்த மூன்று ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஏற்கெனவே ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை 24 அன்று, குப்வாரா மாவட்டம், கௌட், திரிமுக் டாப் அருகே ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

மேலும் ஜூலை 18-ம் தேதி குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கெரான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தோடா மாவட்டத்தின் தேசா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜூலை 16-ம் தேதி இரவு பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

x