பொடுகுத் தொல்லை போக்குவது எப்படி?


பொடுகுத் தொல்லை

தலையில் முடி கொண்ட எல்லோருக்கும் பொடுகுத் தொலை சாதாரணமாக வந்து செல்லும். சிலருக்கு நீடித்த பாதிப்புகளை தரக்கூடும்.

தலையில் வறண்ட சருமம், அரிப்பை உணர்வது, செதில் செதிலாக உதிர்வது, தோள்பட்டை மற்றும் ஆடைகளில் உதிர்ந்து பொதுவெளியில் சங்கடம் உண்டாவது... என பொடுகின் பரவலுக்கு ஏற்ப நாம் அவற்றை அடையாளம் காண்கிறோம்.

பொடுகு வராது தடுக்கவும், பொடுகு கண்டவர்கள் அவற்றைப் போக்கவும், பொடுகு ஏற்படாவண்ணம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கவும் அவசியமான இயற்கை மருத்துவ வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.

பொடுகு - செதிலாக

பொடுகு வகைகள்

நாம் சந்திக்கும் பொடுகு பிரச்சினைகள் 2 வகைகளாக தென்படுகின்றன. முதலாவது எண்ணெய்ப் பிசுக்கோடு இருக்கும். தலையில் எண்ணெய் தேய்க்காதவர்கள்கூட கேசம் மற்றும் தோலில் எண்ணெய் பிசுக்கை உணர்வார்கள். இது இயற்கையாக சுரக்கும் ஒரு சீரம் ஆகும். இது அதிகம் கண்ட சருமத்தில், சுகாதாரமின்மை காரணமாக ஈஸ்ட் படிவுக்கு காரணமாகி, எண்ணெய்ப் பிசுக்கான பொடுகுக்கு வித்திடும்.

அடுத்தது வறள் பொடுகு. சாதாரண பொடுகின் அறிகுறிகளோடு எரிச்சல் முதல் கொப்புளம் வரை தீவிரத்தை உணர்வார்கள். குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக இது அதிகம் இம்சிக்கும். தலைச் சுத்தம் பேணுவது, அப்படி குளிப்பதையும் முறையாக செய்வதன் மூலம் இந்த வறள் பொடுகை அதன் தொடக்கத்திலேயே அகற்றிவிட முடியும். பொடுகின் பாதிப்பு அதிகரிக்கும்போது, முடி கண்ட உடலின் கண்ட இடங்களில் எல்லாம் பொடுகு படுத்த ஆரம்பிக்கும்

காரணங்கள் பல

பொடுகு பல காரணங்களால் வருகிறது. அவற்றில் முக்கியமானது சுகாதாரம் இன்மை. உடலின் இதர பாகங்களில் உருவாகும் இறந்த செல்களைப் போலவே தலையின் சருமத்திலும் உருவாகும் இறந்த செல்களை, குளியல் மூலம் முறையாக அகற்றுவது நல்லது. உடலுக்கு குளிப்பவர்கள், தலைக்குளியலை தள்ளிப்போடுவது தலை சருமத்தின் பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இத்துடன் பொடுகும் கூட்டணி சேரும்போது முடி பொலிவிழப்பது முதல் கொட்டுதல் வரை தீவிரமான பாதிப்புகளுக்கு ஆளாவோம்.

உடல் சூடு மற்றும் சூடான சூழலில் புழங்குவது, சூழலில் அதிகரித்திருக்கும் மாசு ஆகியவை பொடுகு தொந்தரவை ஊக்குவிக்கும். சிலர் சதா ஹெல்மெட், தொப்பி என அணிந்திருப்பார்கள். இவர்களுக்கு சற்றே சிவந்த செதில்களில் பொடுகுத் தொந்தரவு உருவாகும்.

சோரியாசிஸ், எக்சிமா போன்ற நோய்களின் பக்கவிளைவாகவும், ஒரு சில மரபுக் காரணங்களினாலும், அதிகளவு வேதிப்பொருட்களை உள்ளும் வெளியிலுமாக எடுப்பதாலும் பொடுகுத் தொந்தரவு அதிகரிக்கும்.

சிலர் எப்போதும் கடுகடுவென கோபம், எரிச்சல் உணர்வுகளோடு இருப்பார்கள். அம்மாதிரியானவர்களுக்கு பொடுகு அதிகரித்து அவர்களின் எரிச்சலை கூட்ட நேரிடும். எனவே மன அழுத்தம் தணிக்கும் உபாயங்களை நாடுவது நல்லது.

உணவு ரகங்களில் அதீத காரம் மற்றும் இனிப்பு சேர்க்கையை தவிர்ப்பது உத்தமம். உரிய ஊட்டச்சத்து இன்மையும் பொடுகு பாதிப்பாக அடையாளம் காட்டும். எனவே சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கிய கேசம்

இயற்கை மருத்துவத்தில் பொடுகுக்கு விடை கொடுக்கலாம்

டீ-ட்ரி ஆயில் எனப்படும் தேயிலை எண்ணெய் பொடுகு தொந்தரவுக்கு மிகச்சிறந்த நிவாரணியாகும். எந்த பொடுகின் பாதிப்பு இருப்பினும் தேயிலை எண்ணெய் கொண்டு தீர்வு பெறலாம். 2 மூடி தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் 2 சொட்டு தேயிலை எண்ணெய் என்றளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். விரல் நுனியில் எண்ணெயை ஒற்றியெடுத்து, மண்டையோட்டு சருமத்தின் மேல் தடவி வர வேண்டும்.

இதற்கு மட்டுமன்றி, பொதுவாகவே தேங்காய் எண்ணெய் தலையின் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. செக்கில் அரைத்து எடுத்த தூய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. முடி கொட்டுவதை தடுத்து, வறள் பொடுகின் பாதிப்பிலிருந்து தே.எ நம்மை பாதுகாக்கும். தலைக்கேசம் மற்றும் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பாதுகாக்கவும், சிறந்த ஆன்டி ஆக்சிஜன் காரணியாகவும், கேசத்தின் பொலிவு மற்றும் மினுமினுப்புக்கும் தேங்காய் எண்ணெயின் இயற்கையான உட்பொருட்கள் உதவும்.

முதல் நாள் தேங்காய் எண்ணெய் தேய்த்து அடுத்தநாள் சிகைக்காய் கொண்டு கூந்தலை அலசி வர, பொடுகு போக்குவதோடு ஒட்டுமொத்த கேசத்தின் ஆரோக்கியமும், அழகும் மேம்படும். தற்காலத்திய இளம் தலைமுறையினரின் பொடுகு உள்ளிட்ட தலை சருமத்தின் பிரச்சினைகளுக்கு தலையாய காரணம் எண்ணெய் வைக்கும் பழக்கம் இல்லாததே. தேங்காய் எண்ணெய் தவிர்த்து இதர வேதிப்பொருட்கள் அடங்கிய பிசுக்குகளை தேய்ப்பதும் நமது நோக்கத்தை பாழாக்கக் கூடும் .

கற்றாழை உள் - வெளி உபயோகங்கள்

பொடுகு கண்டவர்கள் மற்றும் கேச ஆரோக்கியத்தை விரும்புவோர், கற்றாழையை உள்ளுக்கும் வெளி உபயோகத்துக்கும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். கற்றாழை சோற்றினை மோரில் கலந்து அருந்தி வருவது உடலின் சூட்டை போக்கவும், கழிவுகள் அகற்றவும், நமது பிரதான நோக்கமான கேசத்தின் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

அப்போதைக்கு எடுத்த கற்றாழை ஜெல் கொண்டு, மண்டையோட்டு சருமத்தின் மீது மசாஜ் செய்வது மிகச்சிறந்த இயற்கை வழி கண்டிஷனர் ஆகும்.

இயற்கை நிவாரணிகள்

உணவே மருந்து

இளநீர், மோர் உட்பட நீர் அதிகம் கொண்ட காய்கள் மற்றும் கனிகளை நமது உணவுகளில் உறுதிசெய்வது அவசியம். வெள்ளரி, தர்ப்பூசணி, கீரைகள் இவற்றில் நல்லது. ஒமேகா கொழுப்பு அமிலம் கொண்ட விதைகள்(ஆளி), மீன்(மத்தி) ரகங்கள், வால்நட், ஆட்டு ஈரல் ஆகியவற்றையும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் மூலம் வறள் பொடுகு செதில்கள் தங்காதிருக்கவும், அவற்றால் உருவான சரும பாதிப்புகளை இயற்கையாக குணப்படுத்தவும் முடியும். ஃபலூடாவில் ஜெல் போல கலந்து தருவார்களே.. அந்த திருநீற்றுப் பச்சிலையும் பொடுகுக்கு எதிரான நமது போருக்கு உதவும்.

கருவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி சேர்த்த சாதாரண மோர் அன்றாடம் அருந்தி வருவது நல்லது. சிலர் தனிப்பட்ட உடல் பாதிப்பு காரணமாக மோர் ஆகாரத்தை தவிர்ப்பார்கள். அவர்கள் தேங்காயிலிருந்து தயிர் எடுத்தும் பயன்படுத்தலாம். 1 குவளை தேங்காய் பாலில் கால் எலுமிச்சை பழத்தின் சாறு கலந்து, ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மோரில் தேவையான உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டிய ஆகாரங்கள்

பதப்படுத்திய உணவுகள், மைதாவில் செய்த துரித உணவுகள் ஆகியவை பொதுவான ஆரோக்கிய கேடு மட்டுமல்ல, தலை சருமத்தின் ஈஸ்ட் சேர்க்கைக்கு காரணமாகிவிடும். சிலருக்கு கோதுமை உட்கொள்வதும் இவ்வாறு தொந்தரவுகளை சேர்க்கும். பீட்சா, பர்கர் போன்ற உணவுகள் குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு கெடுதல் செய்யக் கூடியவை. உடலின் நாட்பட்ட பாதிப்புகளை வித்திடும் இந்த உணவுகளை தவிர்ப்பதும் உத்தமம்.

பொடுகில்லா தலைமுறை உருவாகட்டும்

குறிப்பாக தலை சருமத்தின் சுகாதாரம் பேணுவதும், சருமத்தை வறளச் செய்யும் அதிக வேதி உட்பொருட்கள் கலந்த ஷாம்பூ பயன்பாட்டை தவிர்த்து சிகைக்காய் தேய்த்து குளிப்பதும், தலைக்கு தொடர்ந்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதும் பொடுகில்லா ’தலை’முறை உருவாக உதவும்.

x