கனமழையால் பயங்கர நிலச்சரிவு: பெங்களூரு - மங்களூர் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து


பெங்களூரு: ஹாசன் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு- மங்களூரு மார்க்கத்தில் இயக்கப்படும 8 ரயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் உயிர்நாடியான ஹேமாவதி ஆறு மற்றும் ஓடைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சகலேஷ்பூர் தாலுகாவில் கடகர்வள்ளி-யாடகுமேரி இடையே ரயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அத்துடன் ரயில் பாதையை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். இதனால் பெங்களூரு-மங்களூரு மார்க்கத்தில் இயக்கப்படும் 8 ரயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹேமாவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஹோலேநரசிப்பூர் குவேம்பு பேரங்காடியில் உள்ள 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சன்னபட்னா சாலையில் உள்ள குவேம்பு பேரங்காடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் இரவோடு இரவாக வீடுகளை காலி செய்து பாதுகாப்பு மையத்தில் தஞ்சம் புகுந்தனர். மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இதே பிரச்சினை ஏற்படுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஷிமோகா மாவட்டம் ஹோஸ்நகர் தாலுகாவில் உள்ள அரசலு அருகே நேற்று இரவு ஓடும் ரயிலின் மீது பெரிய மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மின்கம்பங்களும் உடைந்தன. இந்த சம்பவத்தால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x