புதுச்சேரி: பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளது, அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஆகிய காங்கிரஸ் முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.