நவீன வாழ்வியல் கோளாறுகளில் ஒன்றாக தூக்கம் இன்மை என்பது அதிகரித்து வருகிறது. தூக்கம் தொலைத்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். இந்த தூக்கமின்மையை இயற்கை வழியில் போக்குவதற்கான வழிவகைகளை இங்கே பார்க்க இருக்கிறோம்.
பாதிப்புக்கு ஆளானவர்களைப் பொறுத்து தூக்கமின்மை பலவகையாக தென்படும். தூக்கம் முறையாக பிடிக்காதவர்கள்; முழுதாக தூங்க இயலாதவர்கள்; நள்ளிரவு வரை கொட்டக்கொட்ட விழித்திருப்போர்; தூங்கி எழுந்ததாய் பேர் செய்துவிட்டு தூக்கம் தொலைத்ததன் சோர்வை பகலெல்லாம் உணர்வோர்; ஆழ்ந்த உறக்கம் என்றாலே வீசை எவ்வளவு என்று விசாரிப்போர்... இப்படி தூக்கமின்மை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த தூக்கமின்மையை விரட்டி, ஆழ்ந்த உறக்கத்துக்கான இயற்கையான வழிகளை பரிந்துரைக்க வருகிறது யோகா மற்றும் இயற்கை மருத்துவம்.
வலியத் தூக்கம் துறக்கும் இளம் வயதினர்
தனிநபர்களைப் பொறுத்தளவில் வேறுபாடு உண்டென்ற போதும், சராசரியாக மனிதர்களுக்கு தினமும் 6 - 8 மணி நேர தூக்கம் அத்தியாவசியம். ஆனால் தூங்குவதை தவறாக கருதும் அளவுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் வலிய தூக்கத்தை மறுதலிப்பது காணப்படுகிறது. அவர்களின் தூக்கத்தை பறிப்பதில் செல்ஃபோன், வீடியோ கேம், சமூக ஊடகங்கள், டிவி உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இளம் வயதில் தூக்கம் தவிர்ப்பதன் பாதிப்புகளை அப்போதைக்கு உணர வாய்ப்பில்லை என்ற போதும், வயதாக பெரும் நோய்களை தூக்கமின்மை உள்ளூர உருவாக்கிவிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இளம் வயதில் தூக்கம் பாதிப்படையும்போது அந்த வயதுக்கு அவசியமான ஹார்மோன் சுரப்பும் பாதிப்படைந்து அவர்களது உடல் மற்றும் மனநலனை தவறாக இட்டுச் செல்லும். எனவே இளம் வயதினரின் முறையான உறக்கத்தை பெரியவர்கள் கண்காணித்து ஒழுங்குபடுத்தலாம்.
குறட்டை விட்டோர் எல்லாம் உறக்கம் கெட்டோர்
இப்படி இரவில் முறையாக உறங்காதவர்களுக்கு அடுத்த நாள் பகல் நெடுக அலுப்பும், சலிப்பும் அதிகம் எழும். உடலில் வலிப்பது போன்ற உணர்வு, வேலையில் கவனமின்மை, நினைவுத்திறன் பாதிப்பு, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை உள்ளிட்டவை தென்படும். நாள்பட அதுவே உடல், மனதில் பாதிப்புகளை விதைக்க ஆரம்பிக்கும். எனவே அன்றாடம் இயன்றவரை முழுமையான தூக்கத்துக்கு வழி செய்ய வேண்டும். அந்த தூக்கமும் தொந்தரவு இல்லாததாக அமைந்திருக்க வேண்டும்.
சிலருக்கு கனவுகள் மற்றும் குறட்டை தொந்தரவுகள் காரணமாகவும் ஆழ்ந்த உறக்கத்தை இழந்திருப்பார்கள். இதுவும் தூக்கமின்மை பிரச்சினைகளில் ஒன்றாகவே அடங்கும். நன்றாக தூங்கினார் என்பதை குறிப்பதற்காக ’குறட்டை விட்டார்’ என்போம். ஆனால் குறட்டையும் முறையான தூக்கம் இல்லாததையே குறிக்கும். பல்வேறு உடல் பாதிப்புகள் காரணமாகவே குறட்டை எழும் என்பதால், அதனை பரிசோதித்து களைந்தால் மட்டுமே அவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகும்.
இயற்கை முறையில் தூக்கம் தருவிக்கலாம்
பக்கவிளைவுகள் அற்ற, இயற்கை முறையில் தூக்கம் தருவிப்பதை பற்றி பார்ப்போம். காலையில் எழுந்ததும் 2 குவளை நீர் அருந்துவது அவசியம். பின்னர் அரை மணி நேரமேனும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவும் சூரிய ஒளியில் அமைந்தால் உத்தமம். சூரியக்கதிர்கள் உடலின் செரட்டோனின் தூண்டி, இரவு உறக்கத்துக்கான மெலட்டோனின் ஹார்மோன் இருப்பை உறுதி செய்யும். உங்கள் உடலில் மெலட்டோனின் போதுமான இருப்பு இருப்பின், தூக்கம் உத்திரவாதமாகும்.
சிலர் இரவு உறங்கும்போதும் விளக்குகள் எரிய வேண்டும் என்பார்கள். சிறுவயது முதலே பயம் உள்ளிட்ட காரணங்களினால் அப்படி பழகி இருப்பார்கள். ஆனால் தூக்கம் தருவிக்கும் ஹார்மோன் இருட்டில் மட்டுமே சுரக்கும். அதனால்தான் படுக்கையறையில் டிவி, செல்ஃபோன் என பிரகாசமூட்டும் திரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். அப்படியானவர்கள் இரவு விளக்கை அணைத்துவிட்டு உறங்கப்பழகலாம். படுக்கையறையில் சன்னமான வெளிச்சம் சிந்தும் நீல நிற விளக்கு பொருத்தலாம். நீல நிறம் இயற்கையாக மனதை சாந்தப்படுத்தி தூங்கச் செய்ய வல்லது.
தியானம் பழகுவோம்
மனதை உடலை தளர்த்தி தியானம் பழகுவது தூக்கம் தருவிக்க எளிய உபாயமாகும். தியானம் என்றதும் முனிவர்கள் அளவுக்கு பெரிதாக உருவகப்படுத்த வேண்டும். நேராக நிமிர்ந்து அமர்ந்து, சுவாசத்தை ஆழ்ந்து கவனித்தாலே போதும். மனதில் ஓடும் எண்ணங்களை வால் பிடித்து ஓடாது, அமைதியாக அவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாலே சட்டென்று ஒரு கணத்தில் நம்மை அழுத்தும் நினைவுகள் விலகியோடும்; உடல் லேசாகும்; மனம் விரிந்து சாந்தமடையும். அப்படியே அரைத் தூக்க நிலைக்கு இட்டுச் செல்லும். அதன் பின்னர் அன்றாடங்களை படுத்தி வந்த கவலைகள், மன அழுத்தங்களை களைந்து நிம்மதியான உறக்கத்துக்கு உடல் தயாராகும்.
யோக நித்திரை
‘யோக நித்திரை’ என்பதையும் பழகலாம். கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டது உத்தி இதுவாகும். ஆழ்மனதின் அழுத்தங்களை களையும் இந்த யோக நித்திரையை உரிய முறையில் பழகினாலும் எளிதில் தூக்கம் பிடிபடும். தூக்கம் தொலைத்தவர்கள் என்றிலாது, சகலமானோருக்கும் மனதை அழுத்தும் சஞ்சலங்களில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த உறக்கத்தை பழக யோக நித்திரை உதவும். இதனை பழகியவர்களுக்கு போதிய அளவில் உடல் மனம் தளர்வடைவதோடு, மனம் ஒருமுகப்படுவது, நினைவுத்திறன் மேம்படுவது, சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை சாத்தியமாகும்.
இதன் தொடர்ச்சி நாளை..
ஆரோக்கியமான மற்றும் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி செய்யும் உபாயங்களின் வரிசையில், நிற சிகிச்சை, உடலைத் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள், தூக்கத்துக்கான ஆசனங்கள், அக்குபங்சர் - அரோமா எண்ணெய் பயன்பாடு மற்றும் தூக்கத்தை தருவிக்க உணவில் எதனை சேர்க்க வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல் குறிப்புகளை நாளை பார்ப்போம்..