அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: உ.பி. நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்!


லக்னோ: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி-எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜரானார்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறித்து ராகுல் காந்தி ஆட்சேபணைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக கூறி, இந்த அவதூறு வழக்கை, உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா கடந்த 2018 ஆகஸ்ட் 4ம் தேதி அன்று தாக்கல் செய்தார். பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்தார்.

அப்போது, "கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய ஒருவரை தலைவராக கொண்டிருக்கும் போது, ஒரு கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நிலைநிறுத்துவதாக கூறுகிறது" என்றார். அந்த நேரத்தில் பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவை ராகுல் காந்தி குறிப்பிடுகிறார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த கருத்துகளுக்காக ராகுல் காந்தி மீது விஜய் மிஸ்ரா தொடுத்த அவதூறு வழக்கில், கடந்த பிப்ரவரி 20ம் தேதி அன்று, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சிறப்பு நீதித்துறை நடுவர் சுபம் வர்மா, ஜூலை 26-ம் தேதி இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தார். அதன்பேரில் ராகுல்காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, விசாரணையை வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கர்நாடக பாஜக சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கானது அம்மாநிலத்தில் வெளியாகும் முக்கிய செய்தித்தாள்களில் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் அவதூறானவை எனக் கூறி தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

x