தைப்பூச திருவிழாவையொட்டி நகரத்தார் காவடி சுமந்து நத்தம் வழியாக பாதயாத்திரையாக பழநி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச திருவிழா ஜன.29ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முத்துக்குமாரசுவாமி தங்கப்பல்லக்கில் தினமும் காலை வீதியுலா நடைபெறுகிறது. பிப். 3-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா, பிப். 4-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்.5-ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது.
திருவிழாவில் தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரை துவங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி, செட்டிநாடு,குன்றத்தூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக காவடி சுமந்து பாதயாத்திரையாக கிளம்பி பழநி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா தரிசனத்தில் பங்கேற்க காவடி சுமந்து பாதயாத்திரை கிளம்பிய பக்தர்கள் நத்தம் வழியாக இன்று காலை சென்றனர். இவர்கள் கொசவபட்டி, திண்டுக்கல் வழியாக பிப்.3-ம் தேதி பழநி சென்றடைவர். அங்குள்ள நகரத்தார் மண்டபத்தில் தங்கி காவடிகளுடன் எடுத்துச் சென்ற வேல்களுக்கு வழிபாடு செய்வர்.
தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று பிப்.6-ல் காவடிகளைச் செலுத்தி சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்புகின்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பளித்தனர்.