டெல்லியில் கனமழை: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு


புதுடெல்லி: டெல்லியில் இடியுடன் கூடிய பலத்த மழை மழை பெய்து, பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லியில் திடீரென பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் மேலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

டெல்லியின் புராரி, மாடல் டவுன், காரவால் நகர், ஆசாத்பூர், டெல்லி பல்கலைக்கழகம், சிவில் லைன்ஸ், தில்ஷாத் கார்டன், சீமாபுரி, ரஜவுரி கார்டன் மற்றும் படேல் நகர் பகுதிகளில் காலை முதல் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. இதேபோல் நரேலா, அலிபூர், பாடிலி, பிதம்புரா, பஞ்சாபி பாக், சீலம்பூர், ஷஹாத்ரா, விவேக் விஹார், செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை, ராஜீவ் சவுக், ஐடிஓ, இந்தியா கேட் உள்ளிட்ட டெல்லியின் சில இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது.

இந்நிலையில், சத்தா ரயில் சவுக்கில் மழைநீர் தேங்கியுள்ளதால், சியாமா பிரசாத் முகர்ஜி மார்க்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்.எஸ்.மார்க்கிலிருந்து ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட் நோக்கி வரும் பயணிகள் சத்தா ரயில் சிவப்பு விளக்கிலிருந்து இடதுபுறம் திரும்பி கோடியா புல்-ஓடிஆர்எஸ் புல் மித்தாய்- மோரி கேட் பவுல்வர்டு சாலையில் சென்று ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட்டை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் அதிகபட்சமாக 89.5 மி.மீ., இக்னோவில் 34.5 மி.மீ., பிதம்புரா, நாராயணா மற்றும் புஷ்ப விஹாரத்தில் 8.5 மி.மீ., பிரகதி மைதானத்தில் 6.5 மி.மீ., மழை பெய்துள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

x