320 கி.மீ வேகத்தில் அதிவேக புல்லட் ரயில்: மைசூரு- சென்னை இடையே இயக்க முடிவு


மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயிலுக்குப் பிறகு, மைசூரு-சென்னை இடையே புல்லட் ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே துறை பரிந்துரைத்துள்ளது.

மைசூரு-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் பயணத்தால் மகிழ்ச்சியடைந்த பயணிகளுக்கு இந்திய ரயில்வே தற்போது மற்றொரு நற்செய்தியை வழங்கியுள்ளது. மைசூரு-சென்னை ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே வெறும் 90 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய புல்லட் ரயில் திட்டத்திற்கான முன்மொழிவை ரயில்வே துறை பரிந்துரைத்துள்ளது.

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயிலுக்குப் பிறகு, மைசூரு-சென்னை இடையே புல்லட் ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே துறை பரிந்துரைத்துள்ளது. ஒன்றரை மணி நேர பயணத்தில் இந்த ரயில் பெங்களூரு வழியாக சென்னை மற்றும் மைசூரு இடையே இணைக்கப்பட்டு மூன்று மாநிலங்களில் பயணிக்கும். இந்த புல்லட் ரயில் திட்டம் 463 கிலோமீட்டர் தொலைவின் வழியே செயல்படுத்தப்படும். அதாவது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா வழியே இந்த புல்லட் ரயில் இயங்கும். இந்த ரயில் பெங்களூருவில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 11 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.

மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்தில் சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த அதிவேக ரயில் இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னை, பூந்தமல்லி, சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா மற்றும் மைசூரு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் உள்ளன.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் முடிந்த பிறகு மைசூரு - சென்னை புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படும். இந்த ரயில் மைசூரு, பெங்களூரு, சென்னை வழித்தடத்தின் மேம்பாடு மற்றும் சுற்றுலாவுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் திட்டத்தில் 30 கிமீ சுரங்கப்பாதைகளும் அடங்கும். இதில் சென்னையில் 2.5 கி.மீ., சித்தூரில் 11.8 கி.மீ., பெங்களூரு கிராமப்புறங்களில் 2 கி.மீ., பெங்களூரு நகரில் 14 கி.மீ தூரம் அடங்கும்.

முதற்கட்டமாக சென்னையில் இருந்து பெங்களூரு வரையிலான 306 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. இரண்டாவது கட்டமாக பெங்களூருவில் இருந்து மைசூரு வரை 157 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படும். மொத்தப் பாதையில் 258 கி.மீ, கர்நாடகாவிலும், 132 கி.மீ தமிழகத்திலும், மீதி ஆந்திராவிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x