பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை: கார்கிலில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


கடந்த காலங்களில் பாகிஸ்தான் என்ன முயற்சி செய்தாலும் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டியிருந்தது. அது எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளானாலும் இன்னும் பாடம் கற்கவில்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியைக் கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி இந்தியா முழுவதும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி பெற்ற நாளின் 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி. கார்கிலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்

இதன் பின் அவர் பேசுகையில், "1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமை ஆகியவற்றின் சிறந்த காட்சியைக் கொடுத்தோம். அப்போது இந்தியா அமைதிக்காக முயன்றது உங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பாகிஸ்தான் என்ன முயற்சி செய்தாலும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. அது எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளானாலும் பாடம் கற்கவில்லை.

ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையும். காஷ்மீர் இன்று பெரிய கனவுகளைப் பற்றி பேசுகிறது. ஜி 20 மாநாட்டின் முக்கியமான கூட்டத்தை நடத்த ஜம்மு காஷ்மீர் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது லடாக்கில் சுற்றுலாத் துறை வளர்ந்து வருகிறது. ஷிங்கு லா சுரங்கப்பாதை லடாக்கில் வளர்ச்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய வழியைத் திறக்கிறது. கடுமையான காலநிலை காரணமாக லடாக் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில்," கரோனாவின் போது, ​​கார்கில் பகுதியைச் சேர்ந்த பலர் ஈரானில் சிக்கிக் கொண்டனர், அவர்களை மீண்டும் அழைத்து வர தனிப்பட்ட அளவில் நான் நிறைய முயற்சிகளை மேற்கொண்டேன். ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஜெய்சால்மரில் தங்க வைக்கப்பட்டு முழு திருப்திகரமான உடல்நிலை அறிக்கை கிடைத்ததை அடுத்து அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கின் பட்ஜெட்டை 1100 கோடியில் இருந்து 6 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளோம். அதாவது இது 6 மடங்கு அதிக ஒதுக்கீடாகும். இன்று இந்தப் பணம் லடாக் மக்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது " என்று மோடி கூறினார்.

x