ஃபேஸ்புக் காதலனைத் தேடி வந்த டாட்டூ பெண் கலைஞர் வெட்டிக் கொலை


ஃபேஸ்புக் காதலனை நம்பி வந்த அசாமைச் சேர்ந்த டாட்டூ பெண் கலைஞர் மகாராஷ்டிராவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்திக்ரியா காஷ்யப் என்ற கோயல். டாட்டூ குத்தும் கலைஞராவார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக தாயுடன் டெல்லியில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஃபேஸ்புக் மூலம் மகாராஷ்டிரா மாநிலம், மூர்த்திஜாபர் நகரைச் சேர்ந்த குணால் என்ற சன்னி ஷ்ரிங்கேரே(30) பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில், மும்பையில் கோயல் டாட்டூ குத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அவரிடம், மகாராஷ்டிரா மாநிலம் வந்தால் வேலை வாங்கித் தருவதாக குணால் அழைத்துள்ளார். இதனை நம்பி கடந்த சிலநாட்களுக்கு முன்பு கோயல், மகாராஷ்டிரா வந்து குணாலை சந்தித்துள்ளார். இந்நிலையில் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோயல் நேற்று முன்தினம் குணால் வீட்டில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், விரைந்து வந்து கோயல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜூலை 23 அன்று இரவு குணாலுக்கும், கோயலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கூரிய ஆயுதத்தால் கோயலை குணால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரிய வந்தது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (பிஎன்எஸ்) பிரிவு 103 இன் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். ஃபேஸ்புக் காதலனை நம்பி வந்த இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x