பழனி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பழனி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்புற முடிந்த நிலையில், தைப்பூச திருவிழா இன்று(ஜன.29) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்து வழிபடுவர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் லட்சக் கணக்கான பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவின் போது வழிபடுவார்கள். இதனால் தைப்பூசம் விழா நடைபெறும் 10 நாட்களும் பழனி, மக்கள் வெள்ளத்தால் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்து முடிந்த நிலையில் தைப்பூச திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றப் பட்டது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன.

இந்த திருவிழாவையொட்டி நாள்தோறும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலாவும், இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெறும். திருவிழாவின் 6-ம் நாளான 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் 4-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

x