எப்போதும் எதுக்களிப்பு, நெஞ்செரிச்சலா? இயற்கை முறையில் தீர்வு காணலாம்!


‘என்ன சாப்பிட்டாலும் எதுக்களிக்கிறது, நெஞ்செரிச்சல் தொந்தரவு படுத்தி எடுக்கிறது. இதனால் தொண்டை ரணமாகிறது, தூக்கம் தொலைகிறது’ என்ற புலம்பல் தற்போது அதிகமாகி வருகிறது. குறிப்பாக கரோனாவின் கொடைகளில் ஒன்றாகவும் இந்த பிரச்சினை அதிகம் பேரை பாதித்திருக்கிறது. பொதுவான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தவறுகளாலும் எதுக்களிப்பு அல்லது நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் நம்மில் அதிகம். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இந்த உபாதையை போக்குவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

இயல்பு கெடும் சுருக்குத் தசை

இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழலுக்கு எட்டிப்பார்ப்பதையே எதுக்களிப்பு அல்லது நெஞ்செரிச்சல் என்கிறோம். இரைப்பை மற்றும் உணவுக்குழாய் சந்திப்பில் அமைந்திருக்கும் சுருக்குத் தசை பலவீனமடைவதும் இதற்கு காரணமாகிறது. இரைப்பைக்குள் செல்லும் உணவு மீண்டும் உணவுக்குழாய்க்கு திரும்புவதை தடுப்பது சுருக்குத் தசையின் பிரதான பணி.

தவறான வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப் பழக்கங்களால் இந்த சுருக்குத் தசை இயல்பு குலைந்து, வயிற்று அமிலத்தை உணவுக் குழாய்க்கு அனுமதிக்கிறது. அப்போது எதுக்களிப்பு அல்லது நெஞ்செரிச்சலை உணர்கிறோம். உணவு செரித்தலுக்கு அத்தியாவசியமான ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவுக் குழாயை பாதிக்கும்போது, நாட்பட்ட நெஞ்செரிச்சல் கூடுதல் உபாதைகளையும் வரவழைக்கும். எனவே எதுக்களிப்பின் தொடக்கத்திலேயே வாழ்வியல் மற்றும் உணவு முறைகளில் ஓர் ஒழுங்கினை பழகி தீர்வு காண முயல வேண்டும்.

தவிர்ப்பது எப்படி

சதா மன அழுத்தத்துடன் இருப்பது, வறுத்தது பொறித்தது என வகைவகையான எண்ணெய் ரகங்களை உட்கொள்வது, தாமதமாக உண்பது, ஒரே நேரத்தில் அதிகம் உண்பது, பதப்படுத்திய பாக்கெட் உணவுகள் மற்றும் பீஸா, பர்கர், ஃபிரைட் சிக்கன் உள்ளிட்ட துரித ரகங்களை அடிக்கடி உண்பது, காரம் மற்றும் மசாலா ரகங்களை அதிகம் சேர்ப்பது, காபி, டீ அடிக்கடி பருகுவது, மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளிட்டவையும் நெஞ்சரிச்சலை வரவேற்கக் கூடியவை.

தொடக்கத்தில் இவை பெரிய தொந்தரவாக தென்படாது. நாள் போக்கில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நோயாக மாறிவிடவும் கூடும். எனவே அறிகுறிகள் கண்டதும் உடனடியாக வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

உணவிலும், உண்பதிலும் கவனம்

நெஞ்சரிச்சல் கண்டவர்களில் பெரும்பாலானோர் இரவில் அவதிப்படுவார்கள். அவ்வாறானவர்கள் அதற்கேற்ற தவிர்ப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும் இரவு நெஞ்சரிச்சல் மற்றும் தூக்க பாதிப்பை தவிர்க்கலாம். இவர்கள் மட்டுமன்றி பொதுவாக அனைவருமே இரவு உணவை முன்கூட்டியே எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது இரவு உறங்கச் செல்வதற்கு 3 மணி நேரம் முன்பாகவே இரவுணவை முடித்துவிட வேண்டும். செரிமானத்துக்கு எளிய உணவாக அவை அமைந்திருப்பதும் நல்லது.

இரவு படுக்கும் முறையிலும் தேவையான மாற்றங்களை செய்யலாம். வயிற்றை அழுத்தும் வகையில் குப்புற படுக்கக் கூடாது. வலதுபுறம் சாய்ந்தும் படுக்க வேண்டாம். இடதுபுறம் திரும்பி படுப்பதே இரைப்பை அமிலம் மற்றும் உணவுகள், உணவுக்குழாய்க்கு வருவதை இயற்கையான முறையில் தடுக்கும். நெஞ்செரிச்சல் குறையும் வரை தலையை உயர்த்திப் படுக்க தோதாக இன்னொரு தலையணை கூடுதலாக உபயோகிக்கலாம்.

பொதுவாக சேர்ந்தாற்போல அதிகம் உண்பதை தவிர்ப்பது நல்லது. முந்தைய வேளை பட்டினி அல்லது சரியாக சாப்பிடவில்லை என்றோ, பசி அல்லது ருசி காரணமாகவோ ஒரு கட்டு கட்டுவோருக்கு, நாள்பட எதுக்களிப்பு - நெஞ்செரிச்சல் உத்திரவாதமாகும். நேரத்துக்கு உண்பதும் அவற்றை அளவாக உட்கொள்வதும் நல்லது. இயன்றால் ஒருவேளைக்கான உணவை பிரித்து அடிக்கடி உண்ணப் பழகலாம். இது வயிற்றுக்கு இலகு சேர்க்கும்.

சிலர் சாப்பிட்டது செரிமானமாகட்டும் என உணவருந்திய உடனேயே நடக்க ஆரம்பிப்பார்கள். இது தவறு. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்தே லேசான நடை பழகலாம். மூச்சுப்பயிற்சியும் உதவும். காலையில் அதுவும் சூரிய ஒளியில் நடை பயில்வது உதவும். சூரிய ஒளி உடலின் செரட்டோனின் சுரப்பைத் தூண்டி, இரவு உறக்கத்துக்கு அவசியமான மெலட்டோனின் சுரப்புக்கு உதவும். போதிய நேரம் உறங்கவும், மன அழுத்தம் குறையவும் அவசியமான வாழ்வியல் நடைமுறைகளுக்கு திரும்புவதும் அவசியம்.

உணவே மருந்து

உணவில் பழங்கள், கொட்டைகள், முளைகட்டிய பயிர், நீராகாரங்கள் அதிகம் சேர்ப்பது நெஞ்செரிச்சலை தணிக்க உதவும். மதிய உணவில் அல்லது உணவுக்குப் பின்னர் ஒரு குவளை மோரில் சற்று பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பருகலாம். நார்ச்சத்துள்ள உணவு செரித்தலை தூண்டுவதோடு, வயிறு நிரம்பியதாக உணர்வளித்து அதிகம் உணவு உட்கொள்வதையும் தவிர்க்க உதவும்.

காலையில் மோர் கலந்து கற்றாழை ஜூஸ் அருந்தி வரலாம். 2 ஸ்பூன் கற்றாழை சோற்றுடன், 1 குவளை மோர், சற்றே பெருங்காயம், இஞ்சி சேர்த்து பருகி வரலாம். கேரட் ஜூஸ் அருந்தி வருவது, அதிலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் உள்ளிட்ட உட்பொருட்கள் நெஞ்சரிச்சலை தணிக்க உதவும். கேரட் ஜூஸில் 4 புதினா சேர்ப்பது அதன் பலனை அதிகமாக்கும்.

நெஞ்செரிச்சல் போக்க அதிமதுரம் உதவும். தலா கால் டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சீரகத்துடன், 5 கிராம் அதிமதுரம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்கவைத்து அருந்துவது, நெஞ்செரிச்சல் உபாதைகளை தவிர்க்க உதவும். காஃபீன் நெஞ்செரிச்சலைத் தூண்டும் என்பதால் காபியை தவிர்க்க வேண்டும். அமிலத்தை சமப்படுத்தும் வகையிலான அல்கலைன் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழை, பப்பாளி, கிர்ணி உள்ளிட்ட பழங்களுடன் ஜீரணத்தை தூண்டும் சீரகம், சோம்பு ஆகியவையும் அன்றாட உணவில் உறுதிசெய்யவும். காலிஃபிளவர், கொட்டை ரகங்கள், காய்ந்த திராட்சை ஆகியவையும் அமிலத்தைக் குறைக்கும். அதிக நீர்ச்சத்து மற்றும் ஃபைபர் உள்ளடங்கிய தர்ப்பூசணியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்.

வஜ்ராசனம்

இயற்கை தீர்வுகள்

இயற்கை மருத்துவ முறையின் அடிப்படையில், ஈரப்படுத்திய துண்டு ஒன்றினை நான்காக மடித்து காலையில் வெறும் வயிற்றின் மேல் 20 - 30 நிமிடங்கள் போட்டு வரலாம். மருத்துவ பரிந்துரையின் கீழ் இடுப்புக்குளியல் எடுத்துக்கொள்ளலாம். மன அமைதிக்கு இசை கேட்பது முதல் தியானம் பழகுவது வரை ஈடுபடலாம். ஆசனங்களில் வஜ்ராசனம் பயில்வது, ஜீரண சக்தியை தூண்டி நெஞ்செரிச்சலை குறைக்க உதவும்.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

x