ஜே.பி.நட்டாவுக்குப் பிறகு யார்? - ஆகஸ்ட் இறுதிக்குள் பாஜகவில் செயல் தலைவரை நியமிக்க முடிவு


புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அக்கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜே.பி.நட்டா தலைவர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 2025 ஜனவரிக்கு முன்பாக பாஜகவில் புதிய தலைவருக்கான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பதால், கட்சித் தலைவரின் பணி சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு செயல் தலைவர் பதவியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சூழலில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜக பொதுச் செயலர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேற்று சந்தித்து ஆலோசித்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பினனர் சந்தோஷ், நட்டா ஆகிய இருவரும் புறப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவர் மட்டும் தனியே ஆலோசனை நடத்தினர். கட்சியின் செயல் தலைவர் தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜகவில் வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் ஒரு புதிய செயல் தலைவர் நியமிக்கப்படலாம் என்றும், முழு நேர தலைவர் நியமிக்கப்படும் வரை, செயல் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் ஜே.பி.நட்டா இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் பாஜக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

x